பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டம் திருவாரூர் மாவட்ட பாஜ தலைவர் கைது

திருவாரூர்: திருவாரூர் அருகே கிடாரங் கொண்டான் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்திற்கான செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் பொலிடிகல் சயின்ஸ் 2ம் ஆண்டு படிப்பிற்கான தேர்வில் பாஜ மாவட்ட தலைவர் பாஸ்கருக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்த திருவாரூர் மடப்புரத்தைச் சேர்ந்த திவாகர், அவருக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்து அனுப்பி வைத்த பாஜ கல்வி பிரிவு மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் கைது ெசய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் பாஜ மாவட்ட தலைவர் பாஸ்கரை தேடி கூத்தாநல்லூர் அடுத்த தோட்டச்சேரி கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்றபோது அவர் மாயமாகிவிட்டார். நேற்று காலை கட்சி பிரமுகர் ஒருவர் வீட்டில் அவர் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு போலீசார் சென்றனர். இதையடுத்து பாஸ்கர் தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார்.

விசாரணைக்கு பின்னர் அவரை போலீசார் கைது செய்வதாக தெரிவித்தனர். உடனே அவர் தனக்கு நெஞ்சுவலிப்பதாக கூறியதால், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதயம் சீராக இயங்குவதாக தெரிவித்தனர். எனினும் போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: