×

கர்நாடக அரசு விளம்பரத்தில் நேருவின் பெயர் புறக்கணிப்பு: காங்கிரஸ் கொந்தளிப்பு

பெங்களூரு: சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்நாடக அரசு நேற்று வெளியிட்ட பத்திரிகை விளம்பரத்தில் ஜவகர்லால் நேருவின் பெயரும், புகைப்படமும் புறக்கணிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், ‘இல்லம் தோறும் மூவர்ணக்கொடி’ என்ற பிரசாரத்தின் ஒரு பகுதியாக  கர்நாடக அரசின் சார்பில் பத்திரிகைகளில் நேற்று விளம்பரம்  வெளியிடப்பட்டது.

அதில், மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் உள்பட பல சுதந்திரப் போராட்ட தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றன. சாவர்க்கர் பெயரும், புகைப்படமும் இடம் பெற்றது. ஆனால், சுதந்திர போராட்ட தலைவர்களில் ஒருவரும், நாட்டின் முதல் பிரதமருமான  நேருவின் படம் இதில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இச்செயலுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘76வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில் நேரு மீதான பாஜ.வின் வெறுப்பு உச்சத்தை அடைந்துள்ளது. இது, ஒன்றிய அரசின் மோசமான மனநிலையை வௌிப்படுத்துவதாக உள்ளது,’ என கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறுகையில், ‘பிரிட்டிஷ் ஆட்சி முடிந்ததும் நாட்டில் அடிமைத்தனம்  முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது. சுதந்திர வீரர்களின் பட்டியலில் நேருவை சேர்க்காதது மூலம், ஆர்எஸ்எஸ்.சின் அடிமை என்பதை முதல்வர் பசவராஜ் பொம்மை நிரூபித்து விட்டார்,’ என்றார்.

Tags : Karnataka Govt ,Congress , In Karnataka Govt Advertisement Nehru's name boycott: Congress turmoil
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...