×

வாதத்திறமையால் நீதிமன்றங்களின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த மூத்த வழக்கறிஞர் நடராஜனுடைய புகழ் நிலைத்து நீடிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தனது அறிவுக் கூர்மையாலும், வாதத் திறமையாலும் நீதிமன்றங்களின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த மூத்த வழக்கறிஞர் நடராஜனுடைய புகழ் என்றும் நிலைத்து நீடிக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரை:
நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிற மரியாதைக்குரிய சட்ட அறிஞர், மூத்த வழக்கறிஞர் என். நடராஜன் கடந்த ஆண்டு மறைந்தபோது, உடனடியாக அவருடைய இல்லத்திற்குச் சென்று அவருடைய உடலுக்கு மரியாதை செய்து, நான் அஞ்சலி செலுத்தி இருக்கிறேன். என்னுடைய இரங்கல் உரையில், அவரைப்பற்றி குறிப்பிட்டுச் சொன்னேன், ‘’ இந்திய தண்டனைச் சட்டம், இந்திய அரசியல் சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களிலும் வல்லுநராக விளங்கிய நடராஜன், நம்முடைய கலைஞரின் வழக்கறிஞராக பல வழக்குகளில் வாதாடி வெற்றி கண்டவர் அவர்.

சட்ட நிபுணத்துவம் நிறைந்த சட்ட அனுபவத்தின் இமயமாக விளங்கிய நடராஜனின் மறைவு நீதித்துறைக்கும் மட்டுமல்ல, திமுகவிற்கும் மிகப் பெரிய இழப்பாக அமைந்திருக்கிறது’’ என்று அப்போது நான் குறிப்பிட்டேன். திமுகவுக்கும், குறிப்பாக கலைஞருக்கும் மிகப்பெரிய சோதனை ஏற்பட்டது. எல்லோருக்கும் தெரியும். ஜெயின் கமிஷன் மூலமாக அந்த சோதனை வந்த நேரத்தில், தன்னுடைய வாதங்களின் மூலமாகக் காத்தவர் நம்முடைய நடராஜன் என்பதை யாரும் மறந்திடமுடியாது.

நாங்கள் நிச்சயமாக எங்களுடைய வாழ்நாள் முழுவதும் அதை மறக்க முடியாது. அதைப்போல, 1996ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அதற்கு முன்பிருந்த அதிமுக ஆட்சி காலத்து ஊழல்கள் தொடர்பாக, தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட வேண்டும் என்று முடிவெடுத்தபோது, சீரிய ஆலோசனைகளைச் சொன்னவரும் நடராஜன் தான். இங்கே இருக்கிற சண்முகசுந்தரம், இளங்கோவுக்குத் தெரியும். முதல்வர் கலைஞர் நடராஜனை அழைத்து பேசும்போது ‘எந்த வழக்கில் வலுவான ஆதாரம் இருக்கிறதோ அந்த வழக்கை மட்டும் போட்டால் போதும்’ என்று சொன்னார். அதேபோல சட்டபூர்வமான, வலுவான ஊழல் ஆதாரங்கள் உள்ள புகார்களை மட்டும் அன்றைக்கு நாம் போட்டோம். அதுதான் காலம் கடந்தாலும் இறுதியில் வென்றது.

இவை அனைத்தும் நடராஜன் சட்ட நுணுக்கத்துக்கு இன்றைக்கும் உதாரணமாக எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில், கால் நூற்றாண்டு காலம் கொடிகட்டிப் பறந்த வழக்கறிஞர் நடராஜன். பின்னர் உச்சநீதிமன்றத்தில் வாதிடுவதற்காகச் சென்றார்கள். அப்போது, இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞரான ராம்ஜெத்மலானி ஒன்றை குறிப்பிட்டார்கள். ‘தி கிரிமினல் லெஜெண்ட் ஃப்ரம் தமிழ்நாடு’ என்று இவரைச் சொல்லி இருக்கிறார் என்றால் அந்தளவுக்கு இந்தியாவினுடைய புகழ் பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்தவர் நடராசன். மும்பை வெடிகுண்டு வழக்கில் சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞராக என்.நடராஜன் நியமிக்கப்பட்டபோது பலரும் ஆச்சரியப்பட்டார்கள். சி.பி.ஐக்கு எதிரான வழக்குகள் பலவற்றில் ஆஜரான ஒரு வழக்கறிஞரை சி.பி.ஐ தனது தரப்பு வழக்கறிஞராக எப்படி நியமித்தது என்று எல்லோரும் கேட்டார்கள். மிகப்பெரிய வெடிகுண்டு வழக்கில் ஆஜராவதற்கு சரியான வழக்கறிஞர் இந்தியாவிலேயே நடராஜன்தான் என்று சி.பி.ஐ.யை ஒப்புக்கொள்ள வைக்கும் அளவுக்கு வாதத்திறமையை எடுத்து வைத்து அவர் வெற்றி கண்டார்.

இன்னும் சொல்ல வேண்டுமானால், அந்த வழக்கில் துளிகூட அச்சமில்லாமல் அவர் ஆஜரானார். அதேபோல் ராஜீவ்காந்தியினுடைய கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு மரண தண்டனையை சி.பி.ஐ நீதிமன்றம் வழங்கியது. உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்யப்பட்டபோது, இதில் 19 பேரை மரண தண்டனையில் இருந்து விடுவிக்கும் அளவுக்கு வாதங்களை வைத்தவர் நம்முடைய நடராஜன். இப்படி பல்வேறு வழக்குகளுக்காக பல்வேறு மாநிலங்களின் நீதிமன்றங்களில் வாதாடியவர் நடராஜன். ராம்ஜெத்மலானி சொன்னதைப் போல தி கிரிமினல் லெஜெண்ட் ஃபிரம் தமிழ்நாடு என்பதாக மட்டுமில்லாமல் ‘ஃப்ரம் இந்தியா’ என்று சொல்லத்தக்க வகையில் வழக்கறிஞர்களுக்கு எல்லாம் பெரிய வழக்கறிஞராக இருந்தவர் நடராஜன். பிற்காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், இந்திய உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவும் இருந்த கைலாசம் அவர்களிடம் பயிற்சி பெற்றவர் நம்முடைய நடராஜன்.

பிற்காலத்தில் இந்திரா அம்மையார் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த மோகன் குமாரமங்கலத்திடம் ஜூனியராக இருந்தவர். 1960 முதல் வழக்கறிஞராக பணியாற்றி வந்தாலும், 1975-76ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பப்ளிக் பிராசிகியூட்டராக நியமிக்கப்பட்டார்.
அவருடைய ஜூனியர்கள்தான் இன்று பல இடங்களில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்கள். அவருடைய ஜூனியர்களில் ஒருவர்தான் நீதியரசர் சுந்தர் மோகன். சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ, குமரேசன் ஆகியோரை நீங்கள் எல்லோரும் நன்றாக அறிவீர்கள். உச்சநீதிமன்றத்தில் கம்பெனி வழக்குகளை கையாள்வதில் திறம்படைத்த அரவிந்த் தத்தார், இவருடைய ஜூனியர்தான்.

என்.நடராஜன் அலுவலகம் என்பது கோர்ட் ஹாலை விட அதிகமான கூட்டம் இருக்கும் சேம்பராக இருக்கும் என்பது அனைவர்க்கும் தெரியும். நீதிமன்றத்தின் ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு நடராஜன் நடந்து செல்கிறார் என்றால் பெரிய படையே அவரோடு போகும். அப்படி தன்னைப் போலவே பலரையும் உருவாக்கி, ஒரு மிகப்பெரிய சட்டப் பல்கலைக்கழகமாக விளங்கியவர் நம்முடைய நடராஜன் அவர்கள். ஊர் பிரச்னைகளை எல்லாம் தனது பிரச்சினையாகக் கருதி பல்வேறு வழக்குகளை நடத்தினாலும், எப்போதும் சிரித்த முகமாக இருப்பது நடராஜன் அவர்களது தனிச்சிறப்பு ஆகும்.

புகைப்படம் எடுத்தல், மலை ஏறுதல், மீன் பிடித்தல், டென்னிஸ், கோல்ஃப், பில்லியட்ஸ் என எப்போதும் தன்னை உற்சாகமாக வைத்துக் கொண்டார் நடராஜன். இவையெல்லாம் நான் எதற்கு எடுத்துச் சொல்கிறேன் என்றால், இப்போது இருக்கிற இளம் வழக்கறிஞர்களுக்கு ஒரு பாடமாக அமைந்திருக்கிறது. ‘உங்கள் தொழிலுக்கு உண்மையாக இருங்கள். உங்கள் கட்சிக்காரர்களுக்கு உண்மையாக இருங்கள். வாதிடும் நீதிமன்றத்துக்கு உண்மையாக இருங்கள்’ என்று அவர் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார். தனது அறிவுக் கூர்மையாலும், வாதத் திறமையாலும் நீதிமன்றங்களின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த நடராஜன் அவர்களுடைய புகழ் என்றும் நிலைத்து நீடிக்கும் என்று சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags : Natarajan ,Chief Minister ,BCE ,K. Stalin , Argumentative crowned king of courts, Senior advocate Natarajan, Chief Minister M. K. Stalin's speech
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...