×

50 ஆண்டுக்கு முன் மன்னார்குடி கோயிலில் மாயமான 13ம் நூற்றாண்டு சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு: மீட்க சிலை திருட்டு தடுப்பு பிரிவு நடவடிக்கை

சென்னை: மன்னார்குடி வேணுகோபாலசுவாமி கோயிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட பல கோடி மதிப்புள்ள விஷ்ணு, தேவி, பூதேவி சிலைகளை சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருங்காட்சியகத்தில் கண்டுபிடித்துள்ளனர். இந்த சிலைகளை தமிழகத்திற்கு கொண்டு வர சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சிலை திருட்டு தடுப்பு பிரிவு டிஜிபி ெஜயந்த் முரளி உத்தரவுப்படி சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் சிலைகள் திருடப்பட்ட கோயில் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி ஆய்வு செய்தனர். அப்போது வேணுகோபாலசுவாமி கோயிலில் இருந்து திருடப்பட்ட 3 சிலைகள் கடந்த 15.6.1959ல் எடுக்கப்பட்ட புகைப்படம் கிடைத்தது. அந்த புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்த்த போது, கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் போலியானது என்று தெரியவந்தது.

மேலும், கொள்ளையர்கள் திருடப்பட்ட விஷ்ணு, தேவி, பூதேவி சிலைகளுக்கு மாற்றாக போலி சிலைகளை கோயிலில் வைத்து விட்டு யாருக்கும் சந்தேகம் வராதபடி சிலைகளை திருடியதும் உறுதியானது.தொடர் விசாரணையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் இச்சிலைகள் இருப்பது தெரிந்தது.

திருடப்பட்ட சிலைகள் அனைத்தும் 13ம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும் தெரியவந்தது. இதைதொடர்ந்து அமெரிக்காவில் உள்ள பல கோடி மதிப்புள்ள 3 சிலைகளையும் சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் தமிழகத்திற்கு கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். அதற்கான அரசின் ஒப்புதலுக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அரசிடம் இருந்து முறையான அனுமதி கிடைத்ததும் முறையான ஆவணங்களை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்திற்கு அனுப்பி 3 சிலைகளையும் தமிழகத்திற்கு கொண்டு வர சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Tags : United States ,Mannergudi Temple ,of Statue Theft Division , Mysterious idol in Mannargudi temple, found in America, anti-theft unit action to recover idol
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து