தீவுத்திடலில் கலைநிகழ்ச்சி, கொண்டாட்டங்களுடன் நடந்த 3 நாள் உணவு திருவிழா நிறைவு: கடைசிநாளில் மக்கள் குவிந்தனர்

சென்னை: சென்னையில் 3 நாட்கள் நடந்த உணவு திருவிழா, கலைநிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களுடன் நேற்று நிறைவடைந்தது. கடைசிநாளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பாரம்பரிய உணவு மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் 12 மாவட்டங்களில் ஏற்கனவே உணவு திருவிழா நடந்தது. 13வது உணவு திருவிழா ‘சிங்கார சென்னையில் உணவுத் திருவிழா 2022’ என்ற பெயரில் தீவுத்திடலில் கடந்த 3 நாட்களாக நடந்தது.

இதையொட்டி கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவு வகைகளை பிரபலப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் இயற்கை உணவுகள், இனிப்புகள், அசைவ உணவுகள் என அனைத்தும் இடம்பெற்று இருந்தது. காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இறுதி நாளான நேற்று மட்டும் இரவு 10 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் இறுதிநாள் என்பதால் காலை முதலே பொதுமக்கள் அதிக அளவில் வர தொடங்கினர். இதனால் தீவுத்திடல் முழுவதும் திருவிழா கூட்டம்போல் காட்சி அளித்தது. உணவு, பொழுதுபோக்கு, பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் என உணவு திருவிழா கோலாகலமாக நிறைவுபெற்றது.

Related Stories: