×

விடுதலைப்போரில் வீரத்தமிழகம் முப்பரிமாண ஒளி-ஒலி காட்சி: கலைவாணர் அரங்கில் இன்று தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் விடுதலைப் போரில் வீரத்தமிழகம் என்ற முப்பரிமாண ஒளி-ஒலி காட்சி இன்று நண்பகல் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைக்கப்படுகிறது. 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் இந்திய விடுதலைக்கு பாடுபட்ட தேசத் தலைவர்களைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள “விடுதலைப் போரில் வீரத்தமிழகம்” என்ற முப்பரிமாண ஒளி-ஒலிக் காட்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று திறந்து வைக்கப்படுகிறது.

200 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்த சுதந்திரப் போராட்டங்கள், ஆங்கிலேயரின் அடக்குமுறைகள், சுதந்திரத்தின் அருமை ஆகியவற்றை இளம் தலைமுறையினரிடையே கொண்டு செல்லும் நோக்கில் இந்த முப்பரிமாண ஒளி-ஒலிக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியில் இந்திய திருநாட்டின் விடுதலைக்குப் போராடிய அரும்பெரும் தலைவர்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் கொண்ட மாதிரிகளை வடிவமைத்து, அவர்களின் வீரதீரச் செயல்கள் மற்றும் தியாகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தென்னகத்தில், குறிப்பாக வீரம் விளைந்த நம் தமிழகத்தில்தான் முதல் சுதந்திரப் போர் ஆரம்பமானது. வேலூர் கோட்டையில் நடந்த சிப்பாய்களின் புரட்சிதான் இந்தியாவில் நடந்த முதல் விடுதலைப் போராக கருதப்படுகிறது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் அழகுமுத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரமங்கை வேலு நாச்சியார், குயிலி, மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை போன்ற வீர மறவர்களின் போராட்டங்களும், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, மகாகவி பாரதியார், பெரியார், ராஜாஜி, திருப்பூர் குமரன், காமராஜர், காயிதே மில்லத், ஜே.சி.குமரப்பா, பசும்பொன் முத்துராமலிங்கம், கடலூர் அஞ்சலை அம்மாள் போன்ற எண்ணற்ற தலைவர்களின் தியாகங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
இந்திய விடுதலைக்கு வித்திட்ட முத்தாய்ப்பான மூன்று போராட்டங்களான ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய நிகழ்வுகளும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இந்த ஒளி-ஒலிக் காட்சி 15.8.2022 (இன்று) முதல் 25.8.2022 வரை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இந்த கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை, அனுமதி முற்றிலும் இலவசம். பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த முப்பரிமாண ஒளி-ஒலிக் காட்சியை பார்வையிட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்கின்றனர்.

Tags : Veerathamilanagam ,Artist Arena , Liberation War, Veerathamigham 3D light and sound display, Kalaivanar Arena
× RELATED பாஜவின் திசை திருப்பும்...