எழும்பூர் மியூசியத்தில் காந்தி சிலை முதல்வர் இன்று திறப்பு

சென்னை: எழும்பூர் அருங்காட்சியக வளாகம், தேசிய கலைக்கூடம் எதிரில் காந்தி அடிகளின் உருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். நம் நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட காந்தியடிகள் 30.1.1948 அன்று அகால மரணத்தை தழுவினார். 1949ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 12ம் நாள் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் காந்தியடிகளின் அஸ்தி கரைக்கப்பட்டு அதன் நினைவாக அமைக்கப்பட்ட காந்தி  மண்டபம் 30.5.1956 அன்று திறந்து வைக்கப்பட்டது.

அவருக்கு பெருமை சேர்க்கின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னையில் காந்தி மண்டப வளாகம் 27.1.1956 அன்றும், இந்த வளாகத்தில் காந்தியடிகளின்  அருங்காட்சியகமும் 2.10.1979 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், காந்தி அடிகள் தமிழ்நாட்டில் மேலாடை துறந்து எளியவர்களைப் போல அரை ஆடை உடுத்திய நூற்றாண்டு நினைவாகவும், 75வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பிக்கின்ற வகையிலும் எழும்பூர் அருங்காட்சியக வளாகம், தேசியக் கலைக்கூடம் எதிரே காந்தியடிகளின் உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்கிறார்கள்.

Related Stories: