கண்களை தானம் செய்ததை தொடர்ந்து மீனா உடல் உறுப்பு தானம்

சென்னை: நடிகை மீனா (46), பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் (46) என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் திருமணம் கடந்த 2009ல் திருமணம் நடந்தது. 2011ல் அவர்களுக்குப் பிறந்த நைனிகா, விஜய்யின் மகளாக‘தெறி’,அரவிந்த்சாமியுடன்‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இந்நிலையில், நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர், சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, கடந்த ஜூன் 28ம் தேதி திடீரென்று மரணம் அடைந்தார். இதில் பெரிதும் நிலைகுலைந்த மீனா, தற்போது அந்த சோகத்தில் இருந்து மீண்டுள்ளார்.

இந்நிலையில் மீனா, உடல் உறுப்பு தானம் குறித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: உயிரைக் காப்பாற்றக்கூடிய சிறந்த விஷயம்தான் உடல் உறுப்பு தானம். என் கணவர் வித்யாசாகருக்கு உடல் உறுப்பு தானமாக கிடைத்து இருந்தால், எனது வாழ்க்கையே மாறியிருக்கும். ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்தால் 8 உயிர்கள் வரைக்கும்  காப்பாற்ற முடியும். இது தானம் செய்பவர்களுக்கும், அதன்மூலம் பலன் அடைபவர்களுக்கும், மருத்துவர்களுக்கும் இடையிலான விஷயம் அல்ல. இது சம்பந்தப்பட்டவர்களின் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடையேயும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நான் என் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு கூறிய மீனா, ஏற்கனவே தனது கண்களை தானம் செய்வதற்கு உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

Related Stories: