×

பிரபல பிரியாணி கடையில் புழு இருந்த பிரியாணி சாப்பிட்டவருக்கு வாந்தி, மயக்கம்; உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அபராதம்

தாம்பரம்: தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலை, பாரத மாதா சாலை சந்திப்பு அருகே சேலம் ஆர்.ஆர்.பிரியாணி என்ற பிரியாணி கடை உள்ளது. நேற்று முன்தினம் மதியம் மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த நண்பர்களான சுசிந்தர் பாலாஜி (27), கேபா (27), விக்னேஷ் (27) ஆகியோர், இந்த கடைக்கு சென்று மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டனர். அப்போது, பிரியாணியில் பெரிய புழு இருப்பதை கண்ட அவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அந்த பிரியாணியை சாப்பிட்ட வாலிபருக்கு சிறிது நேரத்தில் மயக்கம்,  வாந்தி  ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் இதுகுறித்து கடை மேலாளரிடம் புகார் தெரிவித்தனர். அப்போது, அவர், ‘‘பிரியாணியில் புழு எப்படி வந்தது என்று எங்களுக்கு தெரியாது. பிரியாணியில் புழுக்கள் கிடப்பது சகஜமான ஒன்றுதான். அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அந்த புழுக்களை எடுத்து கீழே போட்டுவிட்டு சாப்பிடுங்கள். பிடிக்கவில்லை என்றால், பிரியாணிக்கான பணத்தை பெற்றுக் கொண்டு செல்லுங்கள்’’என அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப் போவதாக அவர்கள் தெரிவித்ததற்கு,‘‘நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் புகார் அளித்துக் கொள்ளுங்கள். மாதம், மாதம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை கவனிக்கும் விதத்தில் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். எனவே அவர்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்,’’என அவர் கூறியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மற்றவர்கள் பிரியாணியை அப்படியே வைத்துவிட்டு எழுந்து சென்றனர். பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அனுராதாவிடம் புகார் அளித்தனர். அதன்பேரில், நேற்று தாம்பரம் மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் செந்தில் ஆறுமுகம் சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அந்த கடையில் பிளாஸ்டிக் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தியதும், கடையை சுகாதாரமற்ற முறையில் நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த கடைக்கு ரூ.2,000 அபராதம் விதித்ததுடன், உணவுப் பொருட்களை சுகாதாரமான முறையில் செய்து விற்பனை செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,‘‘தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஓட்டல்கள், சாலையோர கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் சுகாதாரமற்ற முறையில் தான் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து உணவகங்கள், சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்களை தயார் செய்து விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.

Tags : Food Safety Department , A person who ate worm-infested biryani at a famous biryani shop had vomiting, fainting; Food Safety Department officials fined
× RELATED மதுரை சித்திரை திருவிழா.. அன்னதானம்...