முதல் காலாண்டில் எல்ஐசி நிறுவனத்தின் பிரீமியம் வருவாய் ரூ.98,352 கோடி 20.35% அதிகரிப்பு

மும்பை: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எல்ஐசியின் பிரீமியம் வருவாய் 20.35 சதவீதம் அதிகரித்து ரூ.98,352 கோடியாக உள்ளது என எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: எல்ஐசி நிறுவனம், கடந்த ஜூன் 30ம் தேதியுடன் முடிந்த முதல் காலாண்டில் பிரீமியம் வருவாயாக மொத்தம் ரூ.98,352 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 20.35 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. முந்தைய ஆண்டில் இந்த வருவாய் ரூ.81,721 கோடியாக இருந்தது. வரிக்கு பிந்தைய லாபம் ரூ.682.88 கோடியாக உள்ளது.

காப்பீட்டு சந்தையில் எல்ஐசியின் முதலாண்டு பிரீமியம் வருவாயின் பங்களிப்பு கடந்த 2021-22 நிதியாண்டில் 63.25 சதவீதமாக இருந்தது. இது, இந்த நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே 65.42 சதவீதமாக உயர்ந்துள்ளது. முதலாண்டு பிரிமீயம் வருவாயில் கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் எல்ஐசியின் சந்தை பங்களிப்பு 67.52 சதவீதமாக இருந்தது. கடந்த காலாண்டில் மொத்தம் 36.81 லட்சம் பாலிசிக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 23.07 லட்சம் பாலிசிக்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அத்துடன் ஒப்பிடுகையில் 59.56 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. இவ்வாறு எல்ஐசி நிறுவனம் வௌியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: