×

டிஜிபி பெயரில் போலி எஸ்எம்எஸ் காவல்துறை எச்சரிக்கை

சென்னை:  ‘அமேசான் கிப்ட் கார்டுகள்’ என டிஜிபி பெயரில் வரும்  போலியான எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் செய்திகளை யாரும் நம்பவேண்டாம் என மாநகர  காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. ‘அமேசான் கிப்ட்  கார்டுகள்’ என கடந்த சில மாதங்களாக பொதுமக்களுக்கு முன் பின் தெரியாத  செல்போன் எண்களில் இருந்து  எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப்  மூலம் மோசடி நபர்கள்  குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்.

இந்த குறுஞ்செய்திக்குள் சென்றால், அமேசான்  கிப்ட் கார்டுகள் மூலம் உங்களுக்கு பரிசு பொருட்கள் விழுந்துள்ளது. இந்த  பரிசு பொருட்களை நீங்கள் பெற வேண்டும் என்றால் 10 பேருக்கு இந்த  குறுஞ்செய்தியை அனுப்பினால் உங்களுக்கு பரிசு பொருட்கள் வரும் என்று  அறிவிக்கப்படும். அந்த பரிசு பொருட்களை பெற விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்  என்று ஒரு எண் கொடுக்கப்பட்டு இருக்கும். அதை தொடர்பு கொண்டு பேசினால்,  வசீகரமான வகையில் பேசி வங்கி கணக்கு எண்கள், ரகசிய எண்களை பெற்று பணம்  பறித்து மோசடியில் ஈடுபடுவார்கள். இதுபோன்ற மோசடிகள் தற்போது அதிகளவில்  நடந்து வருகிறது.

 தற்போது  தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் ‘அமேசான் கிப்ட்  கார்டுகள்’ பெயரில் எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இதுபோன்ற போலி செய்திகளை நம்ப வேண்டாம் என சென்னை மாநகர காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

Tags : DGP, Fake SMS, Police Alert
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...