×

மகாத்மா காந்தியும்... கன்னியாகுமரி விஜயமும்...

மகாத்மா காந்தியடிகளுக்கும் கன்னியாகுமரிக்கும் நீண்ட நெடிய உறவு உண்டு. குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணையாத காலகட்டம் அது. காந்தியடிகள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வைக்கம் என்ற பகுதியில் கோயிலுக்கு செல்லும் சாலையை தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்த கூடாது என்று இருந்த நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் சாலையை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டு நடைபெற்ற சத்தியாகிர போராட்டத்தில் பங்கேற்க வைக்கம் வந்தார். அப்போது அவர் வைக்கம் சென்றுவிட்டு 1925ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி கன்னியாகுமரி வந்து சேர்ந்தார். அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரசு விருந்தினராக அவர் கன்னியாகுமரியில் தங்கினார். அப்போது அரசு விருந்தினர் மாளிகை பிரிட்டீஷ் ரெசிடெண்டின் கீழ் இருந்தது. விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு எடுத்த காந்தி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலாற நடந்தார். கடற்கரை படிக்கட்டுகளில் நின்றவாறு கடல் அழகை ரசித்தார். அப்போது ஒரு பேரலை அவர் மீது பாய்ந்தது. இதில் அவரது உடல் முழுவதும் நனைந்தது. சமுத்திரத்தாய் என்னை நீராட்டி வரவேற்கிறார் என்று காந்தி கூறி மகிழ்ந்தார். மகாத்மா காந்தி தனது கன்னியாகுமரி வருகை தொடர்பாக நவஜீவன் இதழில் கட்டுரை எழுதியுள்ளார்.

கன்னியாகுமரி தரிசனம் என்று பெயிரிடப்பட்டுள்ள அந்த கட்டுரை 1925ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி இதழில் வெளியானது. அதன் பின்னர் 1934ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி மகாத்மா காந்தி மீண்டும் கன்னியாகுமரி வருந்தார். இப்போது இரண்டாவது முறை. இதில் கன்னியாகுமரியில் அப்போது இடம்பெற்றிருந்த கருணாசலம் பண்டாரம் தர்ம சத்திரத்தில் தங்கினார். அப்போதும் அவர் கன்னியாகுமரி கடலில் நீராடி விட்டு சென்றார்.
மூன்றாவது முறையாக அவர் 1937ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி கன்னியாகுமரி வந்தார். திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரைத்திருநாள் ஆலய பிரவேசம் தொடர்பான பிரகடனம் ஒன்றை செய்திருந்தார். அதற்கு வரவேற்பு அளித்த காந்தி திருவிதாங்கூர் வருகை தந்துவிட்டு திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி வந்தார். அவர் நாகர்கோவிலில் ஓய்வெடுத்தார்.  அவர் நாகர்கோவில் வந்தபோது அரிஜன சேவா சங்க தலைவராக இருந்த டாக்டர் நாயுடு, நகர்மன்ற தலைவராக இருந்த சங்கரன்பிள்ளை ஆகியோர் மகாத்மா காந்தியை வரவேற்றனர்.
 
பின்னர் நாகர்கோவில் நாகராஜா கோயிலில் சென்று காந்திஜி தரிசனம் செய்தார். பின்னர் எஸ்எல்பி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் மகாத்மா காந்தி கலந்துகொண்டார். அப்போது அவருக்கு பரிசாக வழங்கிய பழங்களை அரிஜன மக்களுடன் அவர் விரும்பியவாறு பகிர்ந்து உண்டார். 1937 ஜனவரி 15ம் தேதி கன்னியாகுமரி வந்த அவர் கடற்கரையில் வழக்கம்போல் காலாற நடந்து சென்றார். பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் அம்மனை தரிசிக்க  சென்றார். காந்திஜியும் உடன் இருந்தவர்களும் பஜனை பாடிக்கொண்டு கோயில் வெளிப்பிரகாரம் சுற்றி ஆலயத்திற்கு சென்றனர். அப்போது உதவி ஆணையராக இருந்த மகாதேவ ஐயர், கோயில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் வருகை தந்து மகாத்மா காந்தியை வரவேற்றனர். கோயிலுக்குள் பிராமணர்கள் செல்லும் தூரம் வரை காந்தியும் அழைத்து செல்லப்பட்டார்.

அப்போது கோயிலில் வைத்து தன்னுடன் வந்தவர்களை பார்த்து இதில் தாழ்த்தப்பட்டவர்கள் (அரிஜன்கள்) யாரேனும் உள்ளனரா? என கேள்வி எழுப்பினர். அப்போது உடன் பஜனை பாடி வந்தவர்கள் தாங்கள் அரிஜன்கள் என்பதை தெரிவித்தனர். இதனை கேட்ட காந்தி மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
முன்னொருமுறை கோயிலுக்கு காந்தி வருகை தந்தபோது குறிப்பிட்ட தூரத்தில் அவரை தடுத்து நிறுத்தியிருந்தனர். அப்போது இருந்த வேதனை இப்போது அவரிடம் இல்லை என்பதுடன் அவர் மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் காணப்பட்டார். அங்கு வரையப்பட்டிருந்த மாகோலங்களை கண்டு ரசித்தார். பிற சன்னதிகளிலும் சென்று தரிசனம் செய்தார். கன்னியாகுமரியில் இடம்பெற்றிருந்த விவேகானந்தா நூலகம் சென்ற அவர் சில நூல்களை பார்வையிட்டார். அங்கு இருந்தவர்களை பாராட்டினார்.  அதன் பின்னர் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட காந்தி தனது குழுவினருடன் கொட்டாரம் வழியாக சுசீந்திரம் புறப்பட்டு சென்றார்.

Tags : Mahatma Gandhi ,Kanyakumari , Mahatma Gandhi and... Visit to Kanyakumari...
× RELATED திருமயம், ஆலங்குடியில் 20 அரசு...