×

தாம்பரத்தில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் திறப்பு தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சு

சென்னை: தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள தேசிய சித்த மருத்துவமனை வளாகத்தில், ரூ.13 கோடி செலவில் மத்திய ஆராய்ச்சி குழுமத்தின் புதிய தலைமை அலுவலக கட்டிடம் மற்றும் ரூ.35 கோடி செலவில் அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை புதிய புறநோயாளிகள்  பிரிவு விரிவாக்க கட்டிடம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டன. இதன் திறப்பு விழா  நேற்று நடைப்பெற்றது. விழாவில், மத்திய ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் கனகவல்லி வரவேற்புரை நிகழ்த்தினார்.

புதிய கட்டிடங்களை ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் துறைமுகம், கப்பல், நீர்வழி போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் திறந்து வைத்து, தேசியக்கொடியை அக்கட்டிடங்களில் ஏற்றி வைத்தார்.  பின்னர்,  அமைச்சர்  மா.சுப்ரமணியன் மத்திய ஆராய்ச்சிக் குழுமத்தின் சாதனை குறித்த குறிப்பேட்டை வெளியிட்டு,  நோய் எதிர்ப்பாற்றலை ஊக்குவிக்கும் அமுக்கரா சூரணம் மாத்திரையை , தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர்  வசந்தகுமாரி கமலக்கண்ணன் ஆகியோருக்கு வழங்கினார்.

இதையடுத்து, அமைச்சர் சர்வானந்த சோனாவால் பேசுகையில், ‘‘பிரதமர் மோடி ஆட்சியில் ஆயுஷ் துறை வளர்ச்சி பெற்றுள்ளது. கொரோனா காலத்தில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டது. நாட்டில் தமிழகம் சிறந்த மாநிலமாக செயல்படுகிறது. முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் கொரோனா ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டனர். நான் அசாமை சேர்ந்தவனாக இருந்தாலும்  தமிழகத்தை சொந்த வீடாக பார்க்கிறேன், இது என் வீடாக இருக்ககூடாதா என எண்ணி இருக்கிறேன். இரண்டு புதிய கட்டிடங்களையும் 75ம் வருட சுதந்திர தின விழாவில் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.’’ என தெரிவித்தார்.

அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகையில், ‘‘தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தினமும்  சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த சித்த மருத்துவமனையில்  நாள்தோறும் 2500க்கும் மேற்பட்டவர்கள்  சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவ சேவை மையம் இந்தியாவிலேயே ஆயுஷ் சார்பில் இருக்கக்கூடிய மருத்துவமனைகள்விட அதிக பேர் பயன்படுத்தக் கூடிய அளவிற்கு இருந்து வருகிறது. தமிழகத்தில், 100 சித்த மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 359 காலி பணியிடங்கள் நிரப்பபட்டுள்ளது. வரும் 21ந் தேதி 100 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

பழனியில் புதிய சித்த மருத்துவ கல்லூரி அமைக்க படவுள்ளது. நாமக்கல்லில் சித்த மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. மேலும், இம்மாவட்டத்தில் சித்த மருத்துவ கல்லூரி திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் 200 ஏக்கரில் மூலிகை பண்ணை அமைக்கப்படவுள்ளது. சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழகத்தில் அமைக்கப்படவுள்ளது. ஆளுநர் அனுமதிக்கு காத்திருக்கிறோம். ஆளுநர் கேட்டுள்ள ஆவணங்களை வழங்கியபிறகு அனுமதி விரைவில் கிடைக்கும்,’’ என்றார். விழாவில், ஆயுஷ் அமைச்சக சிறப்பு செயலர் பிரமோத் குமார் பாடக், தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையர் எஸ்.கணேஷ், தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் மீனாகுமாரி, மண்டல தலைவர் டி.காமராஜ்  உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Tambaram ,Tamil Nadu ,Union Health Minister , Opening of new buildings at an estimated cost of Rs 48 crore in Tambaram Tamil Nadu is the best state: Union Health Minister Speech
× RELATED நாடாளுமன்ற தேர்தலையொட்டி 19ம்தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா விடுமுறை