இன்ஜினியரிங் சேர்க்கைக்கு நாளை மறுநாள் தரவரிசை பட்டியல்: அதிகாரிகள் தகவல்

சென்னை:  இன்ஜினியரிங் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலை கழகம் நாளை மறுநாள் வெளியிட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்பில் சேர இதுவரை 2.11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் கட்டணம், சான்றிதழ் பதிவேற்றம் என முழுமையாக விண்ணப்பப்பதிவை முடித்திருந்த 1.69 லட்சம் பேர் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது. இதில் சுயநிதி கல்லூரிகளில் 55 முதல் 60 சதவீதம் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 627 பி.இ., பி.டெக், இடங்களும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுமார் 900 இடங்களும்,  அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 10 ஆயிரம் இடங்களும், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 270 இடங்களும், பி.ஆர்க். படிப்பில் 106 இடங்களும் வருகின்றன.

நடப்பாண்டு கலந்தாய்வில் 434 இன்ஜினியரிங் கல்லூரிகள் இடம்பெற உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் முறையே கல்லூரிகளின் எண்ணிக்கையை பார்க்கையில் 509, 480, 461, 440 என ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. அதன்படி, நடப்பாண்டிலும் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கல்லூரிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(ஏ.ஐ.சி.டி.இ.) சி.எஸ்.இ., தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எந்திர கற்றல், தரவு அறிவியல், இணைய பாதுகாப்பு மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் உள்ளிட்ட வளர்ந்து வரும் பகுதிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதித்துள்ளதால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரித்திருக்கின்றன.

இந்த நிலையில் நடப்பாண்டுக்கான இன்ஜினியரிங் படிப்புக்கு தரவரிசை பட்டியல் நாளை மறு நாள் (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட உள்ளது. தரவரிசை பட்டியலை தொடர்ந்து வருகிற 20ம் தேதி (சனிக்கிழமை) முதல் 23தேதி வரை விளையாட்டு, மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதன் பின்னர், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற 25ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 21ம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது.

Related Stories: