×

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் நாளை தேசியக்கொடி ஏற்றுகிறார்: அப்துல் கலாம், கல்பனா சாவ்லா விருதுகள் வழங்குகிறார்

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை சென்னை, புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றுகிறார். நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை (திங்கள்) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று காலை 9 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். முதல்வர் தேசியக்கொடி ஏற்றுவதற்கான சிறப்பு மேடை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் விஐபிக்கள், சிறப்பு அழைப்பாளர்கள் அமர்வதற்கான மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு இல்லாததால் அமைச் சர்கள், பொதுமக்கள் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி விழாவை பார்க்கலாம்.  சுதந்திரதின விழா நிகழ்ச்சியின்போது போலீஸ் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்வார்.

`தகைசால் தமிழர்’ என்ற விருதுக்கு கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், விருதுடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்று வழங்குகிறார்.
அதேபோன்று, அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள், கோவிட்-19 தடுப்பு பணிக்கான சிறப்பு பதக்கம் உள்ளிட்ட விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவிப்பார்.

முன்னதாக, காலை 8.45 மணிக்கு சுதந்திர தின நாள் நிகழ்ச்சிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் இறையன்பு வரவேற்பார். முதல்வருக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை தலைமை செயலாளர் அறிமுகம் செய்து வைப்பார். இதையடுத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்வார். பின்னர் கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்துக்கு முதல்வர் வந்து, சரியாக 9 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி வைத்து தேசியக்கொடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வணக்கம் செலுத்துவார். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துவார். இதற்காகதமிழகம் முழுவதும் சுதந்திர தின பாதுகாப்புக்காக 1 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags : Chief Minister ,Stalin ,Independence Day ,Abdul Kalam ,Kalpana Chawla , CM Stalin unfurls national flag on 75th Independence Day: Abdul Kalam, Kalpana Chawla present awards
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...