×

ஓய்வுபெற்ற நீதிபதி பாதுகாப்புக்கு சென்ற சென்னை எஸ்எஸ்ஐ உள்பட 4 காவலர்கள் திடீர் தற்கொலை: உயர் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி

சென்னை: ஓய்வுபெற்ற நீதிபதி பாதுகாப்புக்கு சென்ற சென்னை எஸ்எஸ்ஐ உள்பட 4 காவலர்கள் திடீரென தற்கொலை செய்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அருகேயுள்ள மீஞ்சூர், ஜெகஜீவன் ராம் தெருவில் வசிப்பவர் யுவராஜ் (54). இவரது மனைவி சாமுண்டீஸ்வரி. மகள் ஜெயப்பிரியா (23), மகன் ஹரிஹரன் (21). கடந்த 1997ல் தமிழக காவல்துறையில் 2ம் நிலை காவலராக யுவராஜ் வேலைக்கு சேர்ந்தார். இவர் குடிப்பழக்கம் உடையவர். கடந்த 2019ல் எண்ணூரில் யுவராஜ் பணியாற்றியபோது, தொடர் விடுப்பு எடுத்ததால் துறை ரீதியான விசாரணை நடந்தது. எனவே, விரக்தி அடைந்த அவர், ‘குடிப்பழக்கத்தால் வேலைக்கு செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டு விட்டதே’ என்று குடும்பத்தாரிடம் கூறி வருந்தியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்ற யுவராஜ், நீண்டநேரம் கழித்துதான் வீட்டுக்கு வந்து வராண்டாவில் படுத்தார். நள்ளிரவில் சத்தம் கேட்டு மனைவி சாமுண்டீஸ்வரி வெளியே வந்தார். வலது கையில் மணிக்கட்டு நரம்பை பிளேடால் அறுத்த நிலையில் ரத்த வெள்ளத்தில் யுவராஜ் உயிருக்கு போராடியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் வழியிலேயே யுவராஜ் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். மீஞ்சூர் போலீசார் யுவராஜ் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அம்பத்தூர்: வில்லிவாக்கம் அகத்தியர் நகர் ‘ஓ’ பிளாக் பகுதியில் வசித்தவர் பிரபு (32). ஆயுதப்படை காவலர். தற்போது கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி எஸ்சோ (22). இவர்களுக்கு இரண்டு வயதில் கிஷ்மிதா என்ற மகள் உள்ளார். நேற்று முன்தினம் இரவு பிரபு பணி முடிந்து 8 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் வெளியே சென்று மது அருந்திவிட்டு நள்ளிரவு 12 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார். மனைவியின் உறவினரின் திருமண விழாவிற்கு நேற்று செல்ல இருந்தனராம். இதுதொடர்பாக நள்ளிரவு தம்பதிக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இரவில் குழந்தையுடன் மனைவி ஹாலில் படுத்துள்ளார். சிறிது நேரத்திற்கு பின் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது பிரபு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. வில்லிவாக்கம் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தென்காசி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை சேர்ந்தவர் பார்த்திபன் (50). இவருக்கு தீபா (45) என்ற மனைவியும், யுவராஜ் (17) என்ற மகனும், ஹெசிக்கா (12) என்ற மகளும் உள்ளனர். சென்னை டிஜிபி அலுவலகத்தில் பார்த்திபன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்தார். சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிக்கு பாதுகாப்பு அதிகாரியாக கடந்த 11ம் தேதி தென்காசி மாவட்டம் குற்றாலத்துக்கு சென்றார். பழைய குற்றாலம் அருகே விடுதியில் ஓய்வுபெற்ற நீதிபதி தங்கியிருந்தார். விடுதி கெஸ்ட்ஹவுசில் எஸ்எஸ்ஐ பார்த்திபன் தங்கினார். இவருடன் மேத்யூ (60) என்பவரும் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் இரவு 12 மணி வரை பார்த்திபனும், மேத்யூவும் பேசிவிட்டு, தூங்கச் சென்றுள்ளனர்.

நேற்று காலை 6.30 மணியளவில் மேத்யூ எழுந்தபோது, படுக்கையில் பார்த்திபனை காணவில்லை. பாத்ரூம் கதவை தட்டியபோது திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த மேத்யூ, கதவை தள்ளி திறந்து பார்த்தபோது, கைத்துப்பாக்கியுடன் ரத்த வெள்ளத்தில் பார்த்திபன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.தகவலறிந்து குற்றாலம் போலீசார் வந்து விசாரித்தனர். இதில் எஸ்எஸ்ஐ பார்த்திபன், கைத்துப்பாக்கியால் இடது மார்பில் சுட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. பிறகு, தென்காசி எஸ்பி கிருஷ்ணராஜ் மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். பார்த்திபன் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அந்த தனியார் விடுதி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

அம்பை: மதுரை மாவட்டம், பெருங்குடி வலையான்குளம் பகுதியை சேர்ந்த அழகர் மகன் தமிழ்ச்செல்வன் (29). இவர், கடந்த 2016ல் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள 12வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணிக்கு சேர்ந்தார். கடந்த 5ம் தேதி இரவு தங்கியிருந்த அறையில், திடீரென தமிழ்ச்செல்வன் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த சக காவலர்கள் அவரை மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிறகு நெல்லை அரசு மருத்துவமனையிலும், தொடர்ந்து மதுரையில் தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார், அம்பை டிஎஸ்பி பிரான்சிஸ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். திருமணமாகாத விரக்தியில் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது.ஓய்வுபெற்ற நீதிபதியின் பாதுகாப்புக்கு சென்ற எஸ்எஸ்ஐ உள்பட 4 காவலர்கள் தற்கொலை செய்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இரவு 12 மணி வரை பார்த்திபனும், மேத்யூவும் பேசிவிட்டு, தூங்கச் சென்றுள்ளனர். நேற்று காலை 6.30 மணியளவில் மேத்யூ எழுந்தபோது, படுக்கையில் பார்த்திபனை காணவில்லை.

Tags : Chennai ,SSI , 4 cops including Chennai SSI who went to protect retired judge commit suicide: Top police officers shocked
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...