×

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி: தென் மாநிலங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

கொழும்பு: இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீன உளவுக் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி தந்துள்ளது. அந்த கப்பல் நாளை மறுதினம் அம்பந்தொட்ட துறைமுகத்தை வந்தடைய உள்ளது. இதன் காரணமாக, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் 2வது பெரிய துறைமுகமான அம்பந்தொட்ட துறைமுகம், கடல் வழிப்பாதையில் தென் கிழக்கு ஆசியாவை ஆப்ரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவுடன் இணைக்கும் பாதையில் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தை மேம்படுத்த சீனா பல கோடி ரூபாயை கடனாக வழங்கியது.

அதை திருப்பி செலுத்த முடியாததால், கடந்த 2017ல் அம்பந்தொட்ட துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு சீனாவுக்கே இலங்கை தாரை வார்த்தது. ஏற்கனவே இந்தியப் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சீனா, இந்த துறைமுகத்தை தனது ராணுவ தளமாக பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதால், அது இந்தியாவுக்கு தீங்கை ஏற்படுத்தும் என ஒன்றிய அரசு பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சில சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக அம்பந்தொட்ட துறைமுகத்திற்கு சீனா தனது ‘யுவான் வாங்-5’ எனும் உளவு கப்பலை அனுப்பி வைக்க இலங்கை அரசிடம் கடந்த மாதம் அனுமதி கோரியது.

அப்போது இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி ஓடுவதற்கு ஒருநாள் முன்பாக, ஜூலை 12ம் தேதி சீன உளவு கப்பலுக்கு அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. சீனாவின் இந்த உளவு கப்பல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, செயற்கைக்கோள், ராக்கெட் ஆகியவற்றை ஏவுவதைக் கண்காணிக்க பயன்படுத்தப்படுகிறது. இதற்காக கப்பலில் அதிநவீன ரேடார்கள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம், 750 கிமீ சுற்றளவு பகுதியை இந்த கப்பலால் வேவு பார்க்க முடியும். அதாவது, அம்பந்தொட்ட துறைமுகத்திற்கு சீன கப்பல் வரும் பட்சத்தில், தமிழகம், கேரளா, ஆந்திரா முழுவதையும் உளவு பார்க்க முடியும். அது மட்டுமின்றி தென் இந்தியாவில் உள்ள முக்கிய பாதுகாப்பு
நிலைகளையும் சீனா கண்காணிக்க வாய்ப்புள்ளதாக இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனவே, சீன கப்பலுக்கு அனுமதி தரக்கூடாது என இலங்கையிடம் வலியுறுத்தப்பட்டது.

இந்தியாவின் இந்த எதிர்ப்பு காரணமாக, சீன கப்பலின் வருகையை தள்ளி வைக்க வேண்டுமென இலங்கை அரசு கடிதம் எழுதியது.  ஆனால், அதற்குள்ளாக சீனாவில் இருந்து புறப்பட்ட உளவுக் கப்பல், இந்தியப் பெருங்கடலை அடைந்து விட்டதாக அந்நாடு கூறியது. இருப்பினும், அம்பந்தொட்ட துறைமுகத்திற்கு வர இலங்கை அரசு அனுமதி தராததால், சீன உளவு கப்பல் அம்பந்தொட்ட துறைமுகத்தில் இருந்து 600 நாட்டிகல் மைல் தொலைவில் கடலில் நிறுத்தப்பட்டது. கடந்த 11ம் தேதி அம்பந்தொட்ட துறைமுகத்திற்கு வர வேண்டிய சீன கப்பல் வரும் 17ம் தேதி வரை அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் என முதலில் கருதப்பட்டது. சீன கப்பல் வருகையால், இந்தியாவும் தனது கண்காணிப்புகளை தீவிரப்படுத்தியது.

இந்நிலையில், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவுக் கப்பல் அம்பந்தொட்ட துறைமுகத்திற்கு வர இலங்கை நேற்று அனுமதி தந்தது. இதனை இலங்கை வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. தற்போதைய புதிய அனுமதியின்படி, சீன உளவு கப்பல் வரும் 16ம் தேதி அம்பந்தொட்ட துறைமுகத்திற்கு வந்தடையும். அங்கு வரும் 22ம் தேதி வரை கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. சீன கப்பல் வருகையால் இந்தியாவும் தென் மாநில துறைமுகங்களை உஷார்படுத்தி உள்ளது. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதே சமயம், சீன உளவு கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி தந்ததற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஏற்கனவே, சீனாவிடம் இருந்து வாங்கிய தைமூர் போர் கப்பலை பாகிஸ்தான், தனது கராச்சி துறைமுகத்திற்கு கொண்டு செல்லும் வழியில் கொழும்பு துறைமுகத்தில் நேற்று முன்தினம் கொண்டு வந்து நிறுத்தியது. இந்தியாவை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்பதற்காக பாகிஸ்தான் கப்பலுக்கு வங்கதேசம் அனுமதி தரவில்லை. ஆனால், இலங்கை அரசு அதைப் பற்றி கவலைப்படாமல், பாகிஸ்தான் கப்பலுக்கு பச்சை கொடி காட்டியது. அது மட்டுமின்றி, பாகிஸ்தான் கப்பலுடன் போர் பயிற்சியிலும் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

* அனுமதித்தது ஏன்?
இலங்கை தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதிலிருந்து மீள சர்வதேச நிதியத்தின் உதவியை நாடி உள்ளது. ஆனால், சீனாவிடம் வாங்கி பல கோடி கடன்களை மறுசீரமைப்பு செய்யாத வரை இலங்கைக்கு புதிதாக கடன் வழங்க முடியாது என சர்வதேச நிதியம் கைவிரித்து விட்டது. எனவே, சீனாவின் தயவு இலங்கைக்கு அவசியமாகி உள்ளது. சீனா தந்த கடன்களை மறுசீரமைப்பு செய்து, அவற்றை வசூலிக்கும் கால அளவை நீட்டித்தால் மட்டுமே இலங்கையால் சர்வதேச நிதியத்திடம் கடன் பெற முடியும். இந்த இடியாப்ப சிக்கலில்தான் சீனாவுக்கு இலங்கை அனுமதி தந்துள்ளது. அதே சமயம், இலங்கைக்கு இக்கட்டான நிலையில் கைகொடுத்தது இந்தியா மட்டுமே. கடந்த ஓராண்டில் இலங்கைக்கு இந்தியா ரூ.30 ஆயிரம் கோடி வரை நிதி உதவி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Sri Lanka ,India , Sri Lanka approves Chinese spy ship despite India's opposition: Security threat to southern states
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...