75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தின விழா வரும் 15ம் தேதி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கடைவீதிகள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலைங்களில் போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். ரயில் நிலையங்களில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காலை முதல் முக்கிய ரயில் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். பார்சல்கள், சரக்குகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. ரயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் பயணிகளின் உடைமைகள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் பயணிகள், ரயிலில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் நடைபாதைகள், பயணிகள் தங்குமிடம், ஓய்வறை, கழிவறை உள்ளிட்ட இடங்களில் ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்படுகிறது. பயணிகளின் உடைமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதனால் ரயில் பயணிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே ரயில் நிலையத்துக்கு வர வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மெட்ரோ ரயில் பாதையிலும், மெட்ரோ ரயிலிலும் பாதுகாப்பு சோதனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தை ஒட்டி சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரயில்களில் ரிசர்வ் காவல் பிரிவினர், மோப்ப நாய், வெடிகுண்டு கண்டறியும் கருவி ஆகியவற்றின் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். சென்ட்ரல், எழும்பூர், கோவை, மதுரை போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: