மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசியது தொடர்பாக 5 பேர் கைது.!

மதுரை: மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணுவவீரர் உடலுக்கு அமைச்சர் மரியாதை செலுத்திய பின் பாஜகவினர் அஞ்சலி செலுத்த அறிவுறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் ரஜ்ஜவுரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் ராணுவ வீரர் லட்சுமணன் உள்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இன்று காலை தனி விமானம் மூலம் அவரது உடல் ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் இன்று மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட போது தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்டது. மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகே பா.ஜ.கவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறியதால் பிரச்சனை ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேரை கைது செய்து அவனியாபுரம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கைதானவர்களில் 3 பேர் திருச்சி, 2 பேர் மதுரையை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: