×

ரஷ்யா வசமுள்ள உக்ரைன் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: ராணுவமற்ற பகுதியாக அறிவிக்க ஐ.நா. அவை வலியுறுத்தல்...

வாஷிங்டன்: பனிப்போரின் நீட்சியாக அமெரிக்கா ரஷ்யா இடையே நீருபூத்த நெருப்பாக நீடிக்கும் மறைமுக போட்டி எதிரொலியாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கி 6 மாதங்களாகிவிட்டன. உக்ரைனின் தென்கிழக்கில் ரஷ்ய படைகள் முன்னேறினாலும் கூட எதிர்பார்த்த வெற்றி இன்னும் கிட்டவில்லை. போரின் தொடக்கத்திலேயே ரஷ்யா வசமாகிவிட்ட ஜபோரிசியா அணுமின் நிலையம் அண்மை காலமாக அடுத்தடுத்து தாக்குதலுக்கு இலக்காகி வருவது ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு அவை அவசரமாக கூடி விவாதிக்கையில் உலகம் எதிர் கொண்டுள்ள பேராபத்தை உணர்ந்து ஜபோரிசியா அணுமின் நிலையத்தை சுற்றிலும் ராணுவ மற்ற பகுதியாக அறிவிக்குமாறு சர்வதேச அணுசக்தி முகமை கேட்டுக்கொண்டது. ஜபோரிசியா அணுமின் நிலையம் மற்றும் அதன் அருகே தாக்குதல் நடத்த கூடாது என்று உக்ரைனை அறிவுறுத்துமாறு மேற்கு உலக நாடுகளை ரஷ்யா வலியுறுத்தியது.

சர்வதேச அணுசக்தி முகமையின் ஆய்வுக்கு முழுமையாக ஒத்துழைக்கவும் ரஷ்யா உறுதியளித்தது. ஜபோரிசியா அணுமின் நிலையம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அதில் உக்ரைனிய ஊழியர்களே தொடர்ந்து பணியில் இருக்கின்றனர். ரஷ்யா வசமாகி விட்ட போதிலும் இதனை மீட்கும் முயற்சியை உக்ரைன் தொடர்கிறது. அணுமின் நிலையத்தை சுற்றிலும் சண்டை நடந்ததால் கடந்த ஜூன் மாதமே அங்கு ஆய்வு நடத்த சர்வதேச அணுசக்தி முகமை முயன்றாலும் இரு தரப்பும் ஒத்துழைப்பு தராததால் அது சாத்தியமாகவில்லை. போர்க்களத்திற்கு நடுவே சிக்கியுள்ள ஜபோரிசியா அணுமின் நிலையம் ஒரு வேலை நேரடி தாக்குதலுக்கு இலக்கானால் விளையும் பேரழிவு அளவிட முடியாததாக இருக்கும். செர்னோபிளை போன்றதொரு பேரழிவு  மீண்டும் நேரிட கூடாது என்று ஐரோப்பா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் அஞ்சுகிறது.                                             


Tags : Russia ,Ukraine nuclear power plant ,UN , Russia,Ukraine,Nuclear,Station,Attack,Demilitarized,Area,UN
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...