தென்னக ரயில்வேயின் ஒரு மின்சார ரயில் இன்ஜினில் கூட கழிவறை வசதி இல்லை: ஆர்.டி.ஐ மூலம் தகவல்...

சென்னை: தென்னக ரயில்வேயின் ஒரு மின்சார ரயில் இன்ஜினில் கூட கழிவறை வசதி இல்லை என்பது ஆர்.டி.ஐ மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் நீண்டு தொலைவு நிறக்காமல் செல்லும் மின்சார ரயில்களின் ஓட்டுனர்கள் சொல்லணா துயரத்திற்கு ஆளாவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மின்சார ரயில் என்ஜினில் உள்ள கழிப்பறை வசதிகள் குறித்து பாண்டியராஜா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக ரயில்வே அமைச்சகத்திடம் கேள்விகள் எழுப்பி இருந்தார். இந்திய ரயில்வேயின் மின்சார பிரிவு இயக்குனர் அனுராக் அகர்வால் அளித்துள்ள பதிலில் 2019 முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் இருபாலரும் பயன்படுத்தும் வகையில் இதுவரை 120 ரயில்களில் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக கிழக்கு கடற்கரை ரயில்வேயில் 28 ரயில்களிலும், தென் மத்திய ரயில்வேயில் 27 ரயில்களிலும், தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் 26 ரயில்களிலும் என்ஜின்களில் கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு மத்திய ரயில்வேயில் 16 ரயில்களிலும், மத்திய ரயில்வேயில் 15 ரயில்களிலும் என்ஜின்களில் கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடகிழக்கு எல்லை ரயில்வேயில் ஒற்றை இலக்க ரயில்கள் என்ஜின்களில் கழிவறை வசதி உள்ளது. ஆனால், தெற்கு ரயில்வேயில் ஒரு மின்சார ரயில் என்ஜினில் கூட கழிப்பறை வசதி இல்லை. இதனால், 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் நிற்காமல் செல்லும் மின்சார ரயில்களின் ஓட்டுநர் சொல்லணா துயரத்திற்கு ஆளாகின்றனர் என ரயில்வே ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

Related Stories: