ஜம்மு காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் இன்று மதுரை வந்தடையும்...அதிகாரிகள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!

மதுரை: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இரண்டு ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்ட இரு பயங்கரவாதிகளை ராணுவத்தினர் எதிர் தாக்குதல் நடத்தி சுட்டு வீழ்த்தியுள்ளனர். சுபேதார் ராஜேந்திர பிரசாத், ரைபில் மேன் மனோஜ் குமார், ரைபில் மேன் லக்ஷ்மணன் ஆகியோர் உயிரிழந்த ராணுவ வீரர்கள் ஆவர். இதில், லஷ்மணன் தமிழகத்தின் மதுரை மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவர். இந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பார்கல் பகுதியில் உள்ள ராணுவ முகாமின் தடுப்பு வேலியை தாண்டி செல்ல சில பயங்கரவாதிகள் முயற்சித்துள்ளனர். அதை கண்டுகொண்ட ராணுவ வீரர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். இரு தரப்பும் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர்கள் மூவர் வீரமரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில் இரு பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் இன்று  விமானம் மூலம் அவரது சொந்த ஊரான மதுரைக்கு கொண்டுவரப்படுகிறது. காஷ்மீரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் மதுரை மாவட்டம் து.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். அவரது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் இன்று விமானம் மூலம் மதுரைக்கு கொண்டுவரப்படுகிறது. ஹைதராபாத்தில் இருந்து காலை 10:20 மணிக்கு புறப்பட்டு 11:50 மணிக்கு மதுரை விமான நிலையம் கொண்டுவரப்படுகிறது.

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சியர், காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சாலை வழியாக சொந்த ஊர் கொண்டு செல்லப்படுகிறது. இறந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யபடும் என்று கூறினார்கள்.

Related Stories: