விதிமீறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை, கருத்தரிப்பு மையங்கள் தொடர்ந்து கண்காணிப்பு; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழகத்தில்  கருத்தரிப்பு மையங்களை  தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம். விதி மீறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை எழும்பூரில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இலவசமாக கோர்பி வேக்ஸ் முன்னெச்சரிக்கை தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், எம்எல்ஏ பரந்தாமன், சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியா முழுவதும் கோர்பி வேக்ஸ் தடுப்பூசி பூஸ்டர் தடுப்பூசியாக போட்டுக்கொள்ள தகுதியுள்ளது என இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்தனர். தற்போது தமிழகத்தில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்கள் தற்போது பூஸ்டர் தடுப்பூசியாக போட்டுக் கொள்ளலாம். இரண்டு தவணை கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக்கொண்ட நபர்களும் கோர்பி வேக்ஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்.

ஒன்றிய அரசு தடுப்பூசி குறித்து எந்த அறிவிப்பு வெளியிட்டாலும் அது உடனடியாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பின் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஒரு இயக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 95.9 சதவீதமாகவும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 89.41 சதவீதமாகவும் உள்ளது. இலவசமாக செலுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசியை மக்கள் செலுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. விதிமுறைகள் மீறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் முதற்கட்டமாக இரண்டு இடங்களில் கருத்தரிப்பு மையங்கள் அரசு சார்பாக துவங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு பேசினார்.

Related Stories: