மெரினா கடற்கரையை அழகுப்படுத்த அமைக்கப்பட்டது ஒதுக்கீடு செய்த ஸ்மார்ட் கடைகளை பெறாத வியாபாரிகளுக்கு நோட்டீஸ்; சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: சென்னையில் வசிக்கும் மக்களுக்கு உள்ள பொழுதுபோக்கு அம்சங்களில்  அனைவரும் விரும்பக்கூடிய இடமாக மெரினா கடற்கரை உள்ளது. இந்த  கடற்கரைக்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வாரவிடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். இவ்வாறு வருபவர்களுக்காக மெரினா கடற்கரை பரப்பில் அலங்கார பொருட்கள், ஸ்நாக்ஸ், விளையாட்டு பொருட்கள், சிற்றுண்டி, குளிர்பானம், துரித உணவகம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையை உலக தரத்துக்கு இணையாக வெளிநாட்டு மக்களே திரும்பி பார்க்கும் வகையில் சீரமைக்க சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மெரினா கடற்கரையை ரூ. 47 கோடி செலவில் அழகுப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மெரினா கடற்கரை மணல் பரப்பில் ஆங்காங்கே முறையின்றி அமைக்கப்பட்டுள்ள தள்ளுவண்டி கடைகளால் கடற்கரை அழகிற்கு பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, இந்த கடைகளை முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட பகுதிகளில் ஒரு வரிசையில் ஸ்மார்ட் கடைகள் அமைக்கப்பட உள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற  அறிவுறுத்தல் படி, மெரினாவில் 900 ஸ்மார்ட் கடைகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டது. சுற்றியுள்ள கடைகளை அகற்றி அதற்கு பதில்  விற்பனையாளர்களுக்கு ரூ.16.5 கோடி மதிப்பில் 900 ஸ்மார்ட் கடைகளை ஒதுக்க சென்னை  மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த கடைகளை பெற 14 ஆயிரத்து 827 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், மெரினா கடற்கரையில் ஏற்கனவே வியாபாரம் நடத்தி வரும், சென்னை மாநகராட்சியால் அடையாளம் காணப்பட்டவர்களை ‘அ’என்ற  அடிப்படையில் 60 சதவீதம் கடைகள் வீதம் 540 கடைகளும், புதிய கடைகள் நடத்த  விருப்பம் உள்ளவர்களுக்கு ‘ஆ’என்ற அடிப்படையில் 40 சதவீதம் கடைகள் வீதம் 360  கடைகளும் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாநகராட்சி ஒதுக்கிய  கடைகள் சிறிய அளவில் இருந்ததாலும், கேட்கப்பட்ட இடங்களில் கடைகள்  கிடைக்காததால், ஸமார்ட் கடை பெற்ற மெரினா வியாபாரிகள் அவற்றை பெற  மறுத்து வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் சிறப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் சென்னை மாநகராட்சி செயல்பட்டது. அவர்கள் வியாபாரிகளுடன் முறையாக பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்னைக்கு முடிவு கட்டாமல் விட்டதால் ரூ.16.5 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட 900 ஸ்மார்ட் கடைகள் அனைத்தும் வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது, இப்பிரச்னைக்கு முடிவு ஏற்படுத்தும் விதமாக மெரினா கடை வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, உரிய ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தாலும், ஸ்மார்ட் கடைகளை ஏற்பதற்கு மெரினா வியாபாரிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, இப்பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டிய நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி அதிரடியாக தொடங்கியுள்ளது. அதன்படி, மெரினாவில் ஸ்மார்ட் கடைகள் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு மாநகராட்சி  சார்பில் நோட்டீஸ் அனுப்பும் பணியை தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி அனுப்பியுள்ள நோட்டீசில், ‘‘குறிப்பிட்ட  காலத்திற்குள், ஒதுக்கப்பட்ட கடைகளை பெறாவிட்டால், அக்கடைகள்  விண்ணப்பித்திருந்த மற்றவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து  ஒதுக்கப்படும். அதற்கு முன்னதாக கடைகள் பெற்றுக்கொள்ளுங்கள்’’என்று 540  பேருக்கும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்பிரச்னைக்கு விரைவில் முடிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2020ம் ஆண்டு  மெரினா கடற்கரையில் விற்பனையாளர்களுக்கு ரூ. 16.5 கோடி மதிப்பிலான 900 ஸ்மார்ட் கடைகள் மாநகராட்சி சார்பில் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த கடைகளை வியாபாரிகள் வாங்க மறுத்து வருகின்றனர். இதனால் இந்த ஸ்மார்ட் கடைகள் அனைத்தும் வீணாகக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கடற்கரையை அழகுபடுத்தும் வகையில் ஸ்மார்ட் கடைகளை அமைக்கும் பணிகளை வேகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடை ஒதுக்கீடு பெற்ற வியாபாரிகள் ஸ்மார்ட் கடைகளை பெற்றுக் கொள்ளுவது தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் இந்த முறை பெறாவிட்டால் குலுக்கல் முறையில் மற்றவர்களுக்கு  அந்த கடைகளை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கடைகள் பெற வியாபாரிகள் முன்வரும்பட்சத்தில் அவர்களின் கோரிக்கை அடிப்படையில் பல்வேறு வசதிகளை செய்து தர சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

Related Stories: