பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் எல்லையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

மதுராந்தகம்: பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் உள்ள  எல்லையம்மன் கோயிலில் ஆடி 4வது வெள்ளியையொட்டி தீமிதி திருவிழா கோலாகலமாக நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே பெரும்பேர்கண்டிகையில் கிராம தேவதையான எல்லையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில், ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் நான்காவது வார வெள்ளி அன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று காலை எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் கோயிலின் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த தீமிதி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். இரவு மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எல்லையம்மன் கிராமத்தின் முக்கிய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது, ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் அவரவர் வீட்டு வாசலில் இருந்து அம்மனுக்கு தீபாரதனை காண்பித்து பயபக்தியுடன் வழிபாடு செய்தனர்.

Related Stories: