திருத்தணி ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு லிப்ட், எஸ்கலேட்டர் வசதி; பயணிகள் கோரிக்கை

திருத்தணி: திருத்தணி ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு லிப்ட், எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர். தமிழகத்தில் அறுபடை வீடுகளில் திருத்தணி முருகன் கோயில் ஐந்தாம்படை வீடாக பிரசித்திபெற்றது. இங்கு நாள்தோறும் ஏராளமான மக்கள் மின்சார ரயில், அரசு பேருந்துகள் மூலம் வந்து முருகனை தரிசித்து செல்கின்றனர். மேலும் பலர் திருத்தணி ரயில் நிலையம் வழியே நாள்தோறும் பல்வேறு பணிகள் காரணமாக ரயில்களில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.  

இந்நிலையில், இங்குள்ள திருத்தணி ரயில் நிலையத்தில் உள்ள 3 பிளாட்பாரங்களிலும் பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிவறை, இருக்கை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மோசமான நிலையில் உள்ளன. அங்கு போதிய நிழற்குடைகள் இல்லாததால், ஏராளமான ரயில் பயணிகள் வெயிலிலும் மழையிலும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும், அங்கு வரும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் சாய்தள வசதி இல்லாததால் படிக்கட்டுகளில் ஏறி கடந்து செல்வதற்கு பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நடைபாதைகளை எளிதாக பயன்படுத்தும் வகையில் லிப்ட் வசதி மற்றும் நடைபாலங்களில் தானியங்கி படிக்கட்டு வசதிகளை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட ரயில்வேத்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என 100க்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: