திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிகளில் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த தாயும், சேயும் திட்டம்; அமைச்சர் ஆவடி நாசர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், காக்களூர் ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் அங்கன்வாடி வளாகத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் வகையில் தாய், சேய் என்ற திட்டம் தொடங்கி வைத்தல் மற்றும் பனை விதை வங்கி மற்றும் பனை விதை குறித்த விழிப்புணர்வு கையேடுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் எஸ்.கே.லலிதா சுதாகர், ஊராட்சி தலைவர் சுபத்ரா ராஜ்குமார் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், துணை தலைவர் எம்.பர்கத்துல்லாகான், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ், டி.கே.பூவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்று அங்கன்வாடிகளில் தாய், சேய் திட்டத்தை தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொட்டலங்களை வழங்கினார்.

அப்போது அமைச்சர் நாசர் பேசுகையில், `ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் 6 மாத குழந்தைகளுக்கு கடந்த மாதம் எடை உயரம் எடுக்கப்பட்டது. அப்போது, இம்மாவட்டத்தில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 868 குழந்தைகளில் தீவிர எடை குறைவாக குழந்தைகள் 1857ம், மிதமான எடை குறைவாக 7208ம், கடுமையான மெலிவு தன்மை கொண்டதாக 1719ம், மிதமான மெலிவு தன்மை 4868 குழந்தைகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக 6 மாதம் முதல் 2 வயதுள்ள குழந்தைகள் 575 தீவிர எடை குறைவாகவும், 1875 குழந்தைகள் மிதமான எடை குறைவாகவும், 607 குழந்தைகள் தீவிர மெலிவு தன்மையுடனும், 1430 குழந்தைகள் மிதமான மெலிவு தன்மையுடன் உள்ளது.  இக்குழந்தைகளின் ஊட்டச்சத்தினை மேம்படுத்த திட்டத்தின் ஒரு பகுதியாக தாய், சேய் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் ஆரோக்கியமாக வளர்த்த தாயின் மூலம் எடை குறைந்த அளவில் உள்ள குழந்தையின் தாய்க்கு உற்ற தோழியாகவும் குழந்தை வளர்ப்பில், உணவூட்டுதலில் ஆலோசனை வழங்குபவராகவும், எடையை அதிகரிக்க உதவி செய்பவராகவும் இருப்பார். இதில் முதல் கட்டமாக காக்களூர் அங்கன்வாடி மையத்தைச் சேர்ந்த 25 குழந்தைகளுக்கு தாய், சேய் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து அங்கன்வாடிகளுக்கும் செயல்படுத்த உள்ளது’இவ்வாறு அவர் பேசினார். பின்னர் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொட்டலங்கள், அங்கன்வாடிகளுக்கு எடை அளவு இயந்திரங்களையும், பனை விதை வங்கி மற்றும் பனி விதை குறித்த விழிப்புணர்வு கையேடுகளையும் அவர் வழங்கினார். இதில் திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன், எஸ்.என்.குமார், கே.கே.சொக்கலிங்கம், என்.டி.சுகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீ.காந்திமதிநாதன், ரா.வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: