×

உத்திரமேரூர் அருகே புதுப்பிக்கப்பட்ட நூலகம் திறக்கப்பட வேண்டும்; கிராம மக்கள் கோரிக்கை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே புதுப்பிக்கப்பட்ட நூலகம் திறக்கப்பட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். உத்திரமேரூர் அடுத்த அரசாணிமங்கலம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 2007ம் ஆண்டு புதியதாக நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நூலகத்தில் அரசாணிமங்கலம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள், மாணவ - மாணவிகள் என அனைத்து தரப்பினர்களும் பயன்பெற்று வந்தனர். இந்த நூலகத்தில் பல்வேறு வகையிலான சிறப்புமிக்க புத்தகங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நூலகம் திறக்கப்படாமல் பூட்டியே இருந்தது.

இதனால், நூலக கட்டிடத்திற்கு உள்ளே உள்ள புத்தகங்கள் பாழாகியது. இதுமட்டுமின்றி இந்த நூலகத்தின் கட்டிடமும் பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில், இந்த நூலகத்திற்கு அண்மையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார்  ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு தற்போது புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. எனினும், நூலகத்தில் இருந்த புத்தகங்கள் பல ஆண்டுகளாக உபயோகிக்காமல் இருந்ததால் பல புத்தகங்கள் வீணாகி போனது. எனவே, மாவட்ட நிர்வாகம் சம்மந்தபட்ட துறையினருக்கு உத்தரவிட்டு சீரமைக்கப்பட்ட இந்த நூலகத்திற்கு தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் மூலம் புதிய புத்தகங்கள் வழங்கி நூலகத்திற்கு நூலகரை நியமித்து உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Uttaramerur , A renovated library is to be opened near Uttaramerur; Villagers demand
× RELATED அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற கல்லூரி ஊழியர் பலி