நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி சார்பில் குறைந்த விலையில் தேசியக்கொடி விற்பனை; நகராட்சி இயக்குனர் தொடங்கி வைத்தார்

கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி சார்பாக குறைந்த விலையில் தேசியக்கொடி விற்பனையை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் துவக்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், 75ம் ஆண்டு சுதந்திர திருநாளை முன்னிட்டு, அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற ஏதுவாக நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி சார்பில் குறைந்த விலையில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுவதற்காக, அதன் துவக்க விழா நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகரமன்ற அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.

இதில், நகர்மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜி.கே.லோகநாதன், நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் சசிகலா கலந்துகொண்டு 75ம் ஆண்டு சுதந்திர திருநாளை முன்னிட்டு, அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற ஏதுவாக நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி சார்பில் குறைந்த விலையில் தேசியக்கொடி விற்பனையை தொடங்கிவைத்தார். அதனை தொடர்ந்து, அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு தேசிய கொடியை வழங்கினார். இதில், கலந்துகொண்ட ஏராளமான வார்டு கவுன்சிலர்கள் தேசியக் கொடியை வாங்கிகொண்டு சென்றனர்.  அவரவர், வார்டுகளில் உள்ள பொதுமக்களிடம் விற்பனையையும் தொடங்கினர்.

Related Stories: