மகாராஷ்டிராவில் 75% அமைச்சர்கள் தில்லாலங்கடிகள்: பல கோடிக்கு அதிபதி

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 20 அமைச்சர்களில் 15 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்த்த பின்னர், ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜ.வை சேர்ந்த தேவேந்திர பட்நவிஸ் துணை முதல்வராகவும் இருக்கின்றனர். இவர்கள் பதவியேற்று 41 நாட்களுக்கு பின் கடந்த 9ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், 18 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது அவர்கள் கொடுத்த பிரமாண பத்திரங்களை, இந்த அமைப்பு ஆய்வு செய்துள்ளது. இதில், ஷிண்டே, பட்நவிஸ் உட்பட மொத்தமுள்ள 20 அமைச்சர்களில் 15 அமைச்சர்கள், அதாவது 75 சதவீத பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இவர்களில் 13 பேர் மீது தீவிரமான குற்ற வழக்குகள் உள்ளன. அனைத்து அமைச்சர்களுமே கோடீஸ்வரர்கள். சராசரியாக அவர்களின் சொத்து மதிப்பு ரூ.47.45 கோடியாகும்.

*  மிக அதிகப்பட்சமாக மலபார் ஹில் தொகுதியை சேர்ந்த அமைச்சர் மங்கல் பிரதாப் லோதாவிடம் ரூ.441.65 மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.  

* குறைந்தபட்சமாக அமைச்சர் புமாரே சந்திபான்ராவ் அசாராமிடம் ரூ.2.92 கோடிக்கான சொத்துகள் மட்டுமே உள்ளன.

* 8 அமைச்சர்களின் கல்வி தகுதி 10, 12ம் வகுப்பு மட்டுமே. 11 அமைச்சர்கள் பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்கள். ஒருவர் டிப்ளமோ படித்தவர்.

Related Stories: