காஷ்மீரில் வீர மரணமடைந்த திருமங்கலம் ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்

திருமங்கலம்: ஜம்மு காஷ்மீரில் வீர மரணமடைந்த திருமங்கலம் வீரரின் உடல் சொந்த ஊருக்கு இன்று கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீர், ரஜோரி மாவட்டம், பாரகாலில் அமைந்துள்ள நார்த்தன் கமாண்டோ முகாமில் நேற்று முன்தினம் அதிகாலை தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில், மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உள்ளிட்ட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் சொந்த ஊரான தும்மகுண்டு புதுப்பட்டிக்கு இன்று கொண்டு வரப்படுகிறது. லட்சுமணனின் உறவினர்கள் கூறுகையில், ‘‘சிறப்பு விமானம் மூலமாக மதுரை விமானநிலையத்திற்கு பகல் 11.30 மணியளவில் லட்சுமணன் உடல் வருகிறது. பின்பு சொந்த ஊரான தும்மகுண்டு புதுப்பட்டிக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சலிக்கு பின்பு லட்சுமணன் உடல் அருகேயுள்ள தங்களாச்சேரி கிராமத்தில் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது’’ என்றனர்.

Related Stories: