×

தமிழக காவல்துறையின் பணிக்கு நீதிபதி பாராட்டு ஆர்டர்லி முறை ஒழிக்க எடுத்த நடவடிக்கை என்ன? டிஜிபி அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆர்டர்லி முறையை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணிக்கவேல் என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் குமரேசன் ஆஜராகி, 19 ஆர்டர்லிகள் திரும்பப்பெறப்பட்டுள்ளனர். சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தியதால், சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார். அப்போது நீதிபதி, 19 ஆர்டர்லிகள் தான் திரும்பப் பெறப்பட்டுள்ளனரா. நாம் மட்டும் ராஜா ராணி இல்லை.

நாட்டின் அனைத்து குடிமக்களும் ராஜா, ராணிக்கள்தான். 75வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் ஆங்கிலேய ஆர்டர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது. பதவி காலியான நிலையில் சட்ட விரோதமாக விடுதிகளில் தங்கியிருந்த எம்.பி.க்களையே காலி செய்ய உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் வேளையில், இங்கு சீருடை அணிந்த காவல்துறையினர் சட்டவிரோதமாக காவலர் குடியிருப்பில் தங்கி இருப்பதை தடுக்க முடியவில்லை. ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரே ஒரு வார்த்தைபோதும். ஆனால் அந்த வார்த்தை அரசிடமிருந்தோ, காவல்துறை தலைவரிடமிருந்தோ வருவதில்லை.

ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது என்கிற தமிழக உள்துறை முதன்மை செயலாளாரின் உத்தரவு பின்பற்றப்படவில்லை. சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறைக்கு உத்தரவிட நேரிடும். ஆர்டர்லிகளை திரும்ப ஒப்படைப்பது உயர் அதிகாரிகளுக்கு சிரமமாகத்தான் இருக்கும். அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். உயர் அதிகாரிகளின் வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் அகற்றுவது தொடர்பான  நடவடிக்கைகள் என்ன? என்றார். அதற்கு காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது, புகார்களின் மீது நடவடிக்கை எடுப்பது என 24 மணி நேரம் பணியாற்றுகிறோம். இந்தாண்டு மட்டும் 1000 காவலர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். 24 மணி நேர ரோந்து பணியிலும் காவலர்கள் ஈடுபடுத்தபடுகிறார்கள் என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், காவல்துறையின் பணியை பாராட்டுகிறேன். தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலத்தில் ஆர்டர்லி முறை இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தால் அது பின்பற்றப்பட வேண்டும். ஆர்டர்லி பயன்படுத்தும் காவல் உயரதிகாரிகளை கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை உள்ளது என்று உத்தரவிட்டார். இந்த வழக்கில் டிஜிபியை எதிர் மனுதாரராக சேர்க்கிறேன். ஆர்டர்லி முறை ஒழிப்பு தொடர்பாக தமிழக உள்துறை முதன்மை செயலாளர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று  உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : Tamil ,Nadu ,DGP , What is the action taken by the judge to abolish orderly system for the work of Tamil Nadu police? Court orders DGP report
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...