சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றுவதில் சாதிய பாகுபாடு நடைபெறாமல் தடுக்க கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு

சென்னை: சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றுவதில் சாதிய பாகுபாடு நடைபெறாமல் தடுக்க மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: ஒரு சில கிராம ஊராட்சிகளில் சாதிய பாகுபாடுகள் காரணமாக தேசியக்கொடியை ஏற்றுவதில் பிரச்னைகளோ, தேசியக்கொடியையும், அதனை ஏற்றுபவரையும் அவமதிக்கும் செயலோ நடைபெறலாம் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் சாதி அல்லது பழங்குடியினரை சேர்ந்த நகராட்சி, ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர், அலுவலக பணியில் உள்ளவர்கள் என எவரையும் அவர்களது அலுவலக பணிகளையும் மற்றும் கடமைகளையும் செய்யவிடாமல் தடுப்பதோ அல்லது அச்சுறுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதனை கருத்தில் கொண்டு எதிர்வரும் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு அனைத்து நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அதுபோல, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இதை செயல்படுத்த வேண்டும். இதில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பின், போதுமான காவல் துறையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும். இந்த புகார்களை கையாள ஒரு குறிப்பிட்ட கைப்பேசி உதவி எண் அறிவிக்கப்படலாம். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஓர் அறிக்கையை அரசுக்கு நாளை (14ம் தேதி) மாலைக்குள் அனுப்பி வைக்க வேண்டும். சுதந்திர தின விழா நிறைவுற்றதும் அதுகுறித்த அறிக்கையை 17ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: