×

உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபர் முதல் டிசம்பர் வரை உப்பள தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபர் முதல் டிசம்பர் வரை உப்பள தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2021-22ம் ஆண்டிற்கான தொழில்துறை மானியக் கோரிக்கையில், மழை காலங்களில் உப்பு உற்பத்தி பணிகள் பாதிக்கப்படும் நேரத்தில் உப்பளத் தொழிலாளர்கள் மாற்றுப் பணி ஏதுமின்றி வருவாய் இல்லாமல் சிரமத்தை சந்திக்கிறார்கள். எனவே, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் உதவி செய்யும் பொருட்டு தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்பு நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.5,000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.5,000 நிவாரண தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் அடையாளமாக நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் 5 தொழிலாளர்களுக்கு நிவாரண தொகைக்கான காசோலைகளை வழங்கினார். இதன் மூலம் உப்பள தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.

மேலும், தமிழ்நாடு உப்பு நிறுவனம், பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் பயன்பெறும் பொருட்டு, அயோடின் கலந்த கல் உப்பு, அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு மற்றும் இருவித செறிவூட்டப்பட்ட உப்பு ஆகியவற்றை பொது விநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு மலிவு விலையிலும், மதிய உணவு திட்டத்திற்கும் விற்பனை செய்து வருகிறது. 2021-22ம் ஆண்டிற்கான தொழில்துறை மானியக் கோரிக்கையில், பொதுமக்கள் பயன்பெறும் பொருட்டு, தமிழ்நாடு உப்பு கழகம் அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு ஆகியவற்றை ‘நெய்தல் உப்பு’ என்ற புதிய வணிக பெயரில் வெளிச்சந்தையில் விற்பனை செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முதல்வர் ‘நெய்தல் உப்பு’ என்ற புதிய வணிக பெயரில் அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பெறும் பொருட்டு நியாயமான விலையில் வெளிச்சந்தையில் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன், கனிமொழி எம்பி, தலைமை செயலாளர் இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு உப்பு நிறுவன மேலாண்மை இயக்குனர் ராசாமணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Chief Minister ,M.K.Stalin , Rs 5,000 relief scheme for families of salt workers from October to December when there is no salt production: Chief Minister M K Stalin launched
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து