நெல்லையில் அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்படலாம்: ஐகோர்ட் கிளை அனுமதி

மதுரை: நெல்லை மாவட்டத்தில் அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்பட உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த மே 14ம் தேதி பாறை சரிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து  நெல்லை மாவட்டத்தில் குவாரிகள், கிரஸர்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது. மேலும் விதிகளை மீறி செயல்பட்டதாக குவாரிகளுக்கு 300 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை, அபராதத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நெல்லை குவாரிகள் சங்கம், முறையாக அனுமதி பெற்று செயல்பட்ட குவாரிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினர்.

மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்பட அனுமதி வழங்கியுள்ளார். மேலும் கல், ஜல்லி, M - Sand போன்ற கனிமங்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என்றும் உத்தரவில் கூறியிருக்கிறார். குவாரிகளுக்கு 300 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். கல் குவாரிகளில் மீண்டும் அளவீடு செய்து அதில் விதிமுறைகள் மீறப்பட்டது உறுதியானால் அபராதம் விதிப்பது குறித்து புதிய நோட்டீஸ் வழங்கலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவில் கூறியுள்ளது.

Related Stories: