பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: போக்குவரத்து துறை அமைச்சர் எச்சரிக்கை

சென்னை: பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொலைதூர நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. கூடுதல் கட்டணம் குறித்து மக்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:

திருவிழா காலங்கள், நீண்ட விடுமுறை வரும் நாட்களில் கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்கள் இடையூறு இல்லாமல் பயணம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் இன்றைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இருந்த போதிலும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், இன்று காலை போக்குவரத்துத்துறை ஆணையர் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை கண்காணிக்க இணை போக்குவரத்து ஆணையர், துணை போக்குவரத்து ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் போன்ற அதிகாரிகளை கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வின்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஆண்டு இதேபோன்ற சூழலில் நானே நேரடியாக ஆய்வு செய்து கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பி வழங்க செய்திருந்தோம். அதோ போன்ற நடவடிக்கைகள் தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: