மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழைக்கு கடந்த 2 மாதங்களில் 120 பேர் உயிரிழப்பு: 370 கிராமங்கள் கடும் பாதிப்பு..!!

மும்பை: மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழைக்கு கடந்த 2 மாதங்களில் 120 பேர் பலியானதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் தற்போது வரை பெய்து வரும் கனமழையால் கட்சிரோலி, புனே, சதாரா, சோலப்பூர், நாசிக், ஜல்ஹான், போந்த்யா போன்ற 28 மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள சிரோஞ்சா நகரில் வெள்ளம் இன்னும் வடியாததுடன் ஏராளமான நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

நகரின் பல இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மழை வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை இருக்கும் என்பதால் மக்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டாம் என்று போலீஸார் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கனமழை மற்றும் வெள்ளம் தொடர்பான பல்வேறு சம்பவங்களில் மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் தற்போது வரை 120 பேர் பலியானதாக அம்மாநில அரசு புள்ளி விவரங்கள் வெளியிட்டுள்ளது. மேலும் 240 விலங்குகள் உயிரிழந்துள்ளதாகவும், 370 கிராமங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: