×

சிறுதானிய உணவுகள் முதல் திருநெல்வேலி அல்வா வரை!: சென்னை தீவுத்திடலில் கோலாகலமாக தொடங்கியது உணவு கண்காட்சி..நுழைவு கட்டணம் கிடையாது..!!

சென்னை: சென்னை தீவுத்திடலில் நடைபெறும் 3 நாள் உணவு திருவிழா கோலாகலமாக தொடங்கியது. ஈட் ரைட் இந்தியா அமைப்புடன் இணைந்து உணவு பாதுகாப்புத்துறை இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது. சிறுதானிய உணவுகள் முதல் திருநெல்வேலி அல்வா வரை விதவிதமான உணவு வகைகளுடன் 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் சுய உதவி குழுவினருக்கும் அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விழாவின் தொடக்கமாக மகளிர் சுய உதவி குழுவினர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். 3 நாட்களுக்கு நடைபெறும் இந்த திருவிழாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

உடலுக்கு கேடான உணவுகளை தவிர்த்து ஆரோகியமான உணவுகளை உண்ணும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மாட்டிறைச்சி உணவு தொடர்பாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், அது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்த அவர், மாட்டிறைச்சி உணவுக்கு யாரும் அரங்கு அமைக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்றார். அந்த அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என்று கூறிய அவர், யாரேனும் அணுகி இருந்தால் அரங்கு ஒதுக்கப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார்.

காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை உணவு திருவிழா நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் இன்று 50,000 லிட்டர் பயன்படுத்திய சமையல் எண்ணெயில் இருந்து பயோ டீசல் தயாரிக்கும் உலக சாதனை நிகழ்வு நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டே திட்டமிடப்பட்ட இந்த நிகழ்ச்சி கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இந்த ஆண்டு நடைபெறுகிறது. பார்வையாளர்களுக்கு நுழைவு கட்டணம் ஏதும் கிடையாது. பிரபல நிறுவனங்களின் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.


Tags : Tirunelveli Alva ,Chennai Firefighter , Chennai Island, Food Fair, Snacks
× RELATED தமிழக மக்கள் பாஜகவின் பின்னே வர தொடங்கியுள்ளனர்: பிரதமர் மோடி பேச்சு