×

காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டலத்தில் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்; பொதுமக்கள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டலத்தில் மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், மதுராந்தகம், கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருப்பதி, பாண்டிச்சேரி, விழுப்புரம், சிதம்பரம், வேலூர், சென்னை, தாம்பரம், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 750க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏழை, எளிய மக்கள் ஒரே பொதுப் போக்குவரத்து சாதனமான அரசுப் பேருந்துகளை மட்டுமே நம்பி உள்ளனர். இந்நிலையில், முக்கிய வழித்தடங்கள் உள்பட எல்லா வழித்தடங்களிலும் போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

பிரதான வழித்தடங்களான செங்கல்பட்டு - தாம்பரம், மதுராந்தகம் - திண்டிவனம், காஞ்சிபுரம் - வேலூர் உள்பட சில வழித்தடங்களில் மட்டுமே போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. காஞ்சிபுரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் அலுவலகப் பணிக்கு செல்லும் அலுவலர்கள், தொழிலாளர்கள், காலை 6 மணிமுதல் ஏறக்குறைய 8 மணிவரை காஞ்சிபுரம், வாலாஜாபாத் உள்பட பேருந்து நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் பண்டிகை காலங்களில் மாலை 6 மணிக்கு மேல் அரசுப் பேருந்துகளை பார்ப்பதே அரிதாக உள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்டபோது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக காஞ்சிபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட ஓரிக்கை, செங்கல்பட்டு, கல்பாக்கம், மதுராந்தகம் உள்பட பணிமனைகளில் பேருந்துகள் புதுப்பிக்கப் படாமல் உள்ளன.

மேலும், போதுமான அளவில் ஓட்டுநர், நடத்துநர்களும் இல்லை. ஓட்டுநர், நடத்துநர் விடுப்பு எடுத்தால் மாற்று ஏற்பாடாக ஓட்டுநர், நடத்துநர்கள் இல்லை. பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், பணியில் இருக்கும்போது இறந்தவர்கள் பணியிடங்கள் மீண்டும் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன. இதனால், போதுமான அளவில் பேருந்துகளை இயக்க முடியவில்லை என்று தெரிவிக்கின்றனர். சாமானிய மக்கள் போக்குவரத்துக்கு அரசுப் பேருந்துகளையே நம்பி உள்ளதால் பயணிகளின் வசதிக்கேற்ப அனைத்து வழித்தடங்களிலும் போதுமான அளவில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Kanchipuram , Additional buses should ply on major routes in Kanchipuram transport zone; Public insistence
× RELATED பாமக திடீர் ஆர்ப்பாட்டம்