ரூ.3 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணி; மாதவரம் மண்டல குழு கூட்டத்தில் முடிவு

திருவொற்றியூர்: மாதவரம் மண்டலத்தில் ரூ.3 கோடி செலவில் வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாதவரம் மண்டல குழுவின் மாதாந்திர வார்டு கூட்டம் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. மண்டல குழு தலைவர் நந்தகோபால் தலைமை வகித்தார். உதவி ஆணையர் கோவிந்தராஜ், செயற்பொறியாளர் சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தங்கள் வார்டு பகுதிகளுக்கு தேவையான பணிகளின் விவரங்களை கவுன்சிலர்கள் முன்வைத்தனர்.

அப்போது, 26வது வார்டு கவுன்சிலர் ஆஸ்னா மெகசியா பெனின், ‘அ.சி.சி.நகரில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான காலி நிலத்தில் பொதுமக்கள் பயன்படும் வகையில் நீச்சல் குளம், நடைபாதை மற்றும் பூங்கா அமைக்க வேண்டும்,’என்றார். அதற்கு மண்டல குழு தலைவர் நந்தகோபால், இதுதொடர்பாக ஆலோசனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து கூட்டத்தில், ரூ.3 கோடி செலவில் படவேட்டம்மன் கோயில் குளம் சீரமைப்பது, மந்தவெளி தெருவில் காரியமேடை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: