×

தலக்காஞ்சேரி கிராமத்தில் கோயில் திருவிழாவில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்ணை மணந்த குடும்பத்தார் காப்பு கட்ட அனுமதி மறுப்பு; எஸ்.பி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் புகார்

திருவள்ளூர்:  திருவள்ளூர் அடுத்த தலக்காஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன் மகன் பிரபாகரன் (28). இவன் கடந்த 8 ஆண்டுகளுக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த கிராமத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் பிரபாகரன் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்துள்ளார். ஆனால் பிரபாகரன் குடும்பத்தில் உள்ள அம்மா, அப்பா, அண்ணன் ஆகியோர் பங்கேற்று வந்துள்ளனர். இந்த நிலையில் இந்த ஆண்டு தலக்காஞ்சேரி கிராமத்தில் உள்ள பழைய திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழாவின் 5-வது வார ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள தீ மிதி திருவிழாவில் பங்கேற்க காப்பு கட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதனால் காப்பு கட்டுவதற்காக பிரபாகரனின் சகோதரர் கார்த்திக், மற்றும் பெற்றோர்கள், உறவினர்கள் சென்றுள்ளனர். ஆனால் கோயில் உபயதாரர்களான பாண்டியன், ராஜேந்திரன், துலுக்கானம், பாஸ்கர், தன்ராஜ், திருமலை, நீலகண்டன், மணிமாறன், வேல்முருகன்,மணிகண்டன்,  மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.பாபு ஆகியோர் காப்பு கட்ட அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்ததால் கோயிலில் தீமிதிக்க அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்த பிரபாகரனின் குடும்பத்தார் நேற்று திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததாக மனைவியின் சாதியையும் இழிவுப்படுத்தியுள்ளனர். வீட்டு வரி,  தண்ணீர் வரி என அனைத்தும் செலுத்தி வரும் தங்கள் குடும்பத்தை கோயில் திருவிழாவில் பங்கேற்க விடாமல் செய்வது மன வேதனை அளிப்பதாகவும், எனவே கோயில் உபயதாரர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து கோயில் திருவிழாவில் காப்புகட்டி தீ மிதிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த புகாரில்  தெரிவித்துள்ளனர்.

Tags : Thalakancheri , Denied permission to marry a lower caste woman at a temple festival in Thalakancheri village; SB The victim's family complained to the office
× RELATED ஐவேலி அகரத்தில் உள்ள மதுபான கூடத்தில்...