அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி; அமைச்சர் நாசர் பங்கேற்பு

ஆவடி: ஆவடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்றம் மற்றும் சுய ஒழுக்கம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆவடி காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்  ஆல்பி ஜான் வர்கீஸ் சார்பில் நடைபெற்றது. இதில், அமைச்சர் ஆவடி சா.மு.நாசர்  தலைமை ஏற்று பள்ளி மாணவர்களிடம் உறுதிமொழி மற்றும் கருத்துரை வழங்கினார். போதை பொருட்களால் உடல் நலம், மனநலம் கெடுவதுடன், சமூக மரியாதையும் குறையும், வாழ்க்கை முழுதும் பாதிக்கப்படும். பொது ஒழுக்கத்தைக் கடை பிடிப்பதன் மூலம் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையமுடியும். மாணவர்களின் லட்சியம் கல்வியில் மட்டும் இருந்தால் சிறந்த பதவிகளுக்கு வர முடியும் என எடுத்துரைக்கப்பட்டது. மேலும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 1098 எண்ணுக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டது.  

இந்நிகழ்ச்சியில், ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ், ஆவடி மேயர் ஜி.உதயகுமார், மாநகர துணை ஆணையர் மகேஷ், ஆவடி உதவி ஆணையாளர் புருஷோத்தமன், ஆவடி போக்குவரத்து உதவி ஆணையர் ராமச்சந்திரன், உளவுத்துறை உதவி ஆணையாளர் ரமேஷ், முதன்மை கல்வி அலுவலர் த.ராமன், மாவட்ட கல்வி அலுவலர் சி ராதாகிருஷ்ணன்,  பள்ளி துணை ஆய்வாளர் ஆர்.ரவி தலைமை ஆசிரியர் எம்.ஜெயவேலு, சப் இன்ஸ்பெக்டர் குமரேசன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொன்னேரி: பொன்னேரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

பொன்னேரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போதை ஒழிப்பு குறித்தும் போதையில் இருந்து விடுப்படுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளித்து மாணவர்கள் உறுதிமொழியினை ஏற்க வைத்தார். இதில் பொன்னேரி தாசில்தார் ரஜினிகாந்த் பொன்னேரி நகர மன்ற தலைவர்  பரிமளம் விஸ்வநாதன், பொன்னேரி இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ், வாட் கவுன்சிலர்கள் உமாபதி, நல்லசிவம், இளங்கோ, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: