×

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும்; பயணிகள் கோரிக்கை

திருவள்ளூர் : திருவள்ளூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் உதயமாகி 25 ஆண்டுகள் பூர்த்தி அடைந்த நிலையில் மாவட்ட தலைநகரில் மாவட்ட அளவிலான அலுவலகங்கள் செயல்படத் தொடங்கியது.  சென்னையில் பல்வேறு காரணங்களுக்காக குடியேறியவர்கள் பொருளாதார நிலை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் திருவள்ளூர் மாவட்டத்திலும் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத் தலைநகரான திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, திருநின்றவூர், பட்டாபிராம் மற்றும், ஏகாட்டூர், கடம்பத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்களும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் விரைவு ரயில்களில் ஏறி பயணிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் திருவள்ளூர் நகரில் வீரராகவர் கோயில், காக்களூர் ஆஞ்சநேயர் கோயில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், புட்லூர் அங்காளம்மன் கோயில் ஆகியவற்றிற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவள்ளூர் வந்து செல்கின்றனர்.

அதே போல் நேமத்தில் உள்ள கல்கி பகவான் ஆலயத்திற்கும் ஆந்திராவிலிருந்து ஏராளமானோர் திருவள்ளூர் வந்து செல்கின்றனர். அதே போல் காக்களூர் தொழிற்பேட்டை, மேல் நல்லாத்தூரில் கார் தொழிற்சாலை, பொக்லைன் இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை டிவிஎஸ் தொழிற்சாலை என தொழிற்சாலைகள் நிரம்பிய மாவட்டமாகவும் திருவள்ளூர் மாவட்டம் தற்போது வளர்ந்து வருகிறது. அதேபோல் தொழிற்பேட்டை பகுதியான ஸ்ரீபெரும்புதூருக்கு திருவள்ளூரிலிருந்து 18 கி.மீட்டர் தூரத்தில் உள்ளதால் ஏராளமான தொழிலாளர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், மாவட்டத்தினஅ பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருவள்ளூர் ரயில் நிலையம் வந்து செல்கின்றனர். நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் திருவள்ளூர் ரயில் நிலையம் வந்து செல்வதாலும்,  மாதத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வருவாய் வரக்கூடிய ரயில் நிலையமாகவும், மாதத்திற்கு ரூ.30 லட்சம் முன்பதிவு மூலம் வருவாய் கிடைத்து வருகிறது. திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகள் உள்ளன, ஒவ்வொரு நடைமேடையிலும் 24 பெட்டிகள்   நிற்க ஏதுவாகவும்,  அதே போல் நடைமேடை 2 மற்றும் 3 ஆகியவற்றில் 28 பெட்டிகளை நிறுத்தவும் முடியும்.

திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து பெங்களூர், மும்பை, மங்களூர் மேட்டுப்பாளையம், திருவனந்தபுரம் போன்ற பிற வெகு தூர மாவட்டங்களுக்கும்,  பிற மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் சென்னையிலிருந்து புறப்பட்டு திருவள்ளூரில் நிற்காமல் அரக்கோணத்தில் நின்று  அங்கிருந்து செல்கிறது. இதனால்  திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பயணிகள் சென்னைக்கோ அல்லது அரக்கோணத்திற்கோ முன்கூட்டியே சென்று அந்த விரைவு ரயிலில் செல்லக் கூடிய நிலை உள்ளது. இதனால் நேரம் அதிகம் விரயமாவதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கும், அலைச்சலுக்கும் ஆளாகின்றனர். எனவே திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் தொழிற்சாலைகள், கல்லூரிகள், கோயில்கள், தொழில் நிறுவனங்கள் அதிகளவில் செயல்படத் தொடங்கியது.  இதனால் நாள்தோறும் லட்சக் கணக்கான மக்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பெங்களூர் செல்லும் பிருந்தாவன், லால்பாக் எக்ஸ்பிரஸ், மும்பைக்கு செல்லும் எல்டிடி எக்ஸ்பிரஸ், மங்களூர் செல்லும் சென்னை மங்களூர் எக்ஸ்பிரஸ் மேட்டுப்பாளையம் செல்லும் நீல்கிரி எக்ஸ்பிரஸ் , சென்னை திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லவேண்டும் என பொது மக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். மாவட்டம் உதயமாகி 25 ஆண்டுகள் பூர்த்தி அடைந்த நிலையில் தற்போது வேகவேகமாக வளர்ந்து வரும் மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டம் விளங்குகிறது. சென்னையை ஒட்டிய மாவட்டம் என்பதால் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே திருவள்ளூர் ரயில் நிலையத்தில் வெகு தூர மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் தென்னக ரயில்வே துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Tags : Thiruvallur , Express trains should stop at Tiruvallur railway station; Passenger request
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...