பட்டப்பகலில் துணிகரம் வீட்டை உடைத்து 27 சவரன் கொள்ளை; மர்மநபர்களுக்கு வலை

செங்கல்பட்டு: வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 27 சவரன், அரை கிலோ வெள்ளி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து பாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொளத்தாஞ்சேரி கிராமத்தில் வசித்து வருபவர் முருகேஷ். இவரது, மகன் தினேஷ் (36). இவரது  மனைவி சுஜாதா (30). தினேஷ் வேலூரில் தனியார் கம்பெனியில் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சுஜாதா ஊராட்சியில் நடக்கும் 100 நாள் வேலைக்கு  சென்றார்.

இவர்களது இரண்டு மகள்கள் பள்ளிக்கு சென்றுவிட்டனர். இதையடுத்து, வேலைக்கு சென்ற சுஜாதா மாலை வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப் பட்டிருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த சுஜாதா உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோவில் இருந்த 27சவரன், அரைகிலோ வெள்ளி, (மூன்று ஜோடி கொலுசுகள்), மகள்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதற்காக வைத்திருந்த ரூ. 6ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து பாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையடித்து சென்ற  மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: