×

வாலாஜாபாத் பேரூராட்சியில் தெருக்களில் கட்டி வைக்கும் மாடுகளால் சுகாதார கேடு; நோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள்

வாலாஜாபாத்: வாலாஜாபாத்  பேரூராட்சியில் தெருக்களில் கட்டி வைக்கும் மாடுகளால் நோய் பரவும்  என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இங்கு, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, பேரூராட்சியில் பேருந்து நிலையம், காவல் நிலையம், பேரூராட்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகம், கருவுலக அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், வங்கிகள், மேல்நிலை, நடுநிலைப் பள்ளிகள், அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம், உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இவை மட்டும் இன்றி வாலாஜாபாதை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களிள் உள்ளவர்கள் வாலாஜாபாத் வந்து தான் இங்கிருந்து பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் சென்று வருகின்றனர். நிலையில் எப்பொழுதுமே பரபரப்பாகவே காணப்படும் வாலாஜாபாத் பேரூராட்சியில் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாக உள்ளன.

குறிப்பாக, வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள தெருக்களில் மிக நீளமான தெரு போஜகார தெரு இந்த தெருவில் மட்டும் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் உள்ளவர்கள் பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்போர் அதிகம். இந்நிலையில், வளர்க்கப்படும் கால்நடைகளை அதற்கான இடங்களில் கட்டி வளர்க்காமல் வீடுகளின் வெளிப்பகுதியில் உள்ள சாலையிலேயே கால்நடைகளை கட்டி வைக்கின்றனர். இந்த கால்நடைகள் அனைத்தும் சாலையிலேயே சாணங்களை கொட்டப்படுவதால் மழைக்காலங்களில் துர்நாற்றம் வீசுவதுடன் இந்த சாணங்கள் முழுவதும் மழைநீர் வடிகால்வாயில் கால்வாயில் கலந்து அடைந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இதுகுறித்து பேரூராட்சி பொதுமக்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத்தின் மிக முக்கிய சாலையாக விளங்குவது போஜகார தெரு இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ளவர்கள் கால்நடைகளை வளர்ப்போர் அதிகம் இவர்கள் முறையாக கால்நடைகளை பராமரிப்பது இல்லை.

இவர்கள் வீட்டின் வெளியே உள்ள தார் சாலையில் கால்நடைகள் கட்டுவது மட்டுமின்றி கால்நடைகளிலும் சாணங்களை மழை நீர் வடிகால் வாயில் போட்டு விடுகின்றனர். மேலும், இந்த கால்நடைகளுக்கு இவர்கள் வைக்கோல், புல் உள்ளிட்டவைகளை வழங்குவதில்லை தனியார் தொழிற்சாலைகளில் இருந்து அகற்றப்படும் பழைய உணவுப் பொருட்களையே கால்நடைகளுக்கு வழங்குகின்றனர். இதை சாப்பிடும் கால்நடைகள் சாணங்கள் இடும்பொழுது கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இவை மட்டுமின்றி நோய் தொற்று பரவும் அபாய நிலையில் இங்கு உள்ளன. குறிப்பாக, மழைக்காலங்களில் இந்த சாலையில் செல்லவே முடியாத சூழல் நிலவுவது மட்டுமின்றி சாலையில் செல்லும் இரு சக்கர வாகனங்களில் சாணங்கள் முழுமையாக நிரம்பிக் காணப்படும்.

இதுபோன்ற சூழ்நிலை குறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தியும் கால்நடை வளர்போர் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை குறிப்பாக இந்த போஜகார தெருவில் தான் பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும் செயல்படுகின்றன. இதுபோன்ற சூழ்நிலையை சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வரும் காலங்களில் டெங்கு, மலேரியா சிக்கன்குனியா உள்பட நோய் தொற்றுகள் ஏற்படுவதற்கு முன்பு போஜகார தெருவை சீரமைத்து தர வேண்டுமென சமூக ஆர்வலர்களும், பேரூராட்சி மக்களும் வலியுறுத்துகின்றனர்.

Tags : Wallajabad , Health hazard due to cows grazing on streets in Walajabad Municipality; Public in fear of disease spread
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு