வேலூர் மாநகராட்சி பகுதியில் போர்வெல்லுடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் தடுப்பு சுவர் அமைப்பு: ஒப்பந்ததாரர் அதிரடி கைது

வேலூர்: போர்வெல்லுடன் கான்கிரீட் தடுப்புசுவர் அமைத்த ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார். வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கடந்த ஜூன் மாதம் வேலூர் லாங்கு பஜாரில் சிமென்ட் சாலை அமைக்கும்போது, பைக்கை அகற்றாமல் சாலை போடப்பட்டது. இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து வேலூர் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் ஜீப்பை அகற்றாமல் சாலை போடப்பட்டது. இதனால் மாநகராட்சி உதவி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கலெக்டர், எம்பி, எம்எல்ஏக்கள், மேயர் தலைமையில் ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, அலட்சியமாக செயல்படும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

இந்நிலையில், வேலூர் மாநகராட்சி 2வது மண்டலம் 19வது வார்டு சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2வது தெருவில் கழிவுநீர் கால்வாய் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி 3 நாட்களுக்கு முன்பு நடந்தது. அப்போது, அங்கிருந்த போர்வெல்லுடன் சேர்த்து தடுப்பு சுவரை அமைத்துள்ளனர். இதனால் போர்வெல் கான்கிரீட்டுக்குள் புதைந்துபோனது. இதுகுறித்த வீடியோ நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதையறிந்த மேயர் சுஜாதா உத்தரவுப்படி மாநகராட்சி குழுவினர் கழிவுநீர் கால்வாய் தடுப்பு சுவரை உடைத்து போர்வெல் அடிப்பம்பை அகற்றினர். ஒப்பந்ததாரர் சுரேந்தரபாபுவின் அனைத்து ஒப்பந்தங்களையும் மேயர் ரத்து செய்தார். புகாரின்படி பொது சொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிந்து ஒப்பந்ததாரர் கலாஸ்பாளையத்தை சேர்ந்த சுரேந்திரபாபுவை(49) கைது செய்தனர்.

Related Stories: