×

கோவையில் வீடுகளுக்கு காஸ் விநியோகிக்க நிலத்தில் பதித்த எரிவாயு குழாய் பயங்கர சத்தத்துடன் வெடித்தது: மக்கள் அலறியடித்து ஓட்டம்

பீளமேடு: கோவையில் சமையல் காஸ் கொண்டு செல்ல பதிக்கப்பட்ட எரிவாயு குழாயை சுத்தப்படுத்துவதற்கு அதிக அழுத்தத்துடன் தண்ணீர் மற்றும் காற்று செலுத்தியபோது, திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கோவை மாவட்டத்தில் ரூ.2 ஆயிரத்து 998 கோடியில் 9.12 லட்சம் வீடுகளுக்கு சமையல் காஸ் வழங்கும் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும்  மீத்தேன் என்ற அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சி.என்.ஜி.) கொச்சியிலிருந்து குழாய் மூலம்  கோவை அருகே பிச்சனூர் என்ற இடத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

அங்கிருந்து மீண்டும் குழாய் மூலம் கோவை  மாவட்டம் முழுவதும் சப்ளை செய்யப்பட உள்ளது. தெருவுக்கு தெரு குழாய்கள் பதிக்கப்பட்ட பின்னர் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு போல மீத்தேன் சமையல் காஸ் இணைப்பு கொடுக்கப்படும். இந்த திட்டம்  இன்னும் 8 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்காக முதல் கட்டமாக கோவை நகர்ப்பகுதிகளில் ஒரு அடி விட்டமுள்ள இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி கடந்த  சில மாதங்களக நடக்கிறது. இந்நிலையில், கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரும்பு குழாய்கள் சாலையில் குழி தோண்டி பதிக்கப்பட்டன.

இந்நிலையில் தண்ணீர்பந்தல் சாலையில் பூமியில் பதிக்கப்பட்ட குழாயை சுத்தப்படுத்தும்பணி நேற்று பகல் 12 மணியளவில் நடந்தது. இதற்காக 4 கிலோ மீட்டர் தூரம் இரும்பு குழாயில் 18 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மற்றும் அதிக விசையுடன்  காற்று கம்ப்ரசர் மூலம் செலுத்தப்பட்டது. ஊழியர்கள் காற்றை வேகமாக செலுத்தியதால் மறுமுனையில் பதிக்கப்பட்ட குழாய் வழியே காற்றும், தண்ணீரும் அதிக அழுத்தத்துடன் வெளியேறி வெடித்து சிதறியது.
இதில், குழாய் அருகில் இருந்த மண் புழுதி அந்த சாலை முழுவதும் பரவியது. மண் மற்றும் கற்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டன. 5 நிமிடம் அந்த பகுதி புகை மூட்டம் போல காணப்பட்டது.

திடீரென பூமியில் இருந்து மண் மற்றும் தண்ணீர் கலந்த புழுதி அதிக சத்தத்துடன் பீறிட்டதால் குழாயில் செலுத்தப்பட்ட காஸ் தான் அழுத்தம் தாங்காமல் வெடித்து விட்டதாக தகவல் பரவி பலர் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். அப்போது, சாலையில் கார்களும், இரு சக்கர வாகனங்களும் சென்றன. இச்சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன இயற்கை எரிவாயு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதிகாரிகள் கூறுகையில், காற்றின் அளவு வழக்கத்தை விட அதிகமானதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

* குழாயில் செலுத்தும் காஸ் வெடிக்குமா?
கோவையில் வீடுகளுக்கு குழாய் மூலம் சப்ளை செய்யப்படும் மீத்தேன் என்ற அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சி.என்.ஜி.) வெளியேறினால் மேலே சென்று விடும். மற்ற வாயுக்களை விட மீத்தேன் வாயு லேசானது என்பதால் அது மேல்நோக்கி சென்று விடும். இதனால், அது எளிதில் தீப்பிடிக்காது. குழாய் மூலம் சப்ளை செய்வதால் மீத்தேன் சமையல் காஸ் தீப்பிடிக்கும் என்ற பயம் தேவையில்லை. இது பாதுகாப்பானது. ஆனால், தற்போது வீடுகளில் சிலிண்டர்களில் பயன்படுத்தும் பெட்ரோலிய காஸ் எடை அதிகமானது. அது எளிதில் தீப்பிடிக்கக் கூடியது. அதை குழாயில் சப்ளை செய்ய முடியாது. எனவே, மீத்தேன் சமையல் காஸ் பெட்ரோலிய சமையல் காஸை விட பல்வேறு  அம்சங்களில் பாதுகாப்பானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Coimbatore , In Coimbatore, underground gas pipeline to supply gas to houses bursts with horrifying noise: people run screaming
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்