மூட நம்பிக்கைகளை பற்றி பேசி கண்ணியத்தை குறைக்காதீர்கள்: மோடிக்கு ராகுல் பதிலடி

புதுடெல்லி: ‘விலைவாசி உயர்வை கண்டித்து, கடந்த 5ம் தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தியது. நேற்று முன்தினம் பானிபட்டில் எத்தனால் ஆலையை காணொளி வாயிலாக திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, ‘கடந்த 5ம் தேதி விரக்தியின் வெளிப்பாடாக சிலர் கருப்பு மேஜிக் செயல்களில் ஈடுபட்டனர். கருப்பு மேஜிக் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்கள் மக்களின் நம்பிக்கையை பெற முடியாது,’ என்று விமர்சித்தார்.  

இது குறித்து ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பிரதமருக்கு பணவீக்கம் தெரியவில்லையா? வேலையில்லா திண்டாட்டம் தெரியவில்லையா? உங்களின் கருப்பு சுரண்டல்களை மறைக்க, கருப்பு மேஜிக் போன்ற மூட நம்பிக்கைகளை பற்றி பேசி நாட்டை தவறாக வழிநடத்துவதை நிறுத்துங்கள். இதுபோல் பேசி, பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைப்பதை நிறுத்துங்கள். மக்களின் பிரச்னைக்கு பதில் சொல்லுங்கள்,’ என்று கண்டித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் கருப்புச் சட்டை அணிந்து, தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்றார்,’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: