அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம்; சிபிஐ விசாரணை கோரி சி.வி.சண்முகம் மனு: அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக தலைமை அலுவலம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவுக்கு போலீஸ் பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.  அதிமுக அலுவலகத்தில் இருந்த சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் அளித்த புகாரை பெற்றுக்கொண்ட ராயப்பேட்டை போலீசார் ஒப்புகை சீட்டு கூட வழங்கவில்லை. போலீசார் உரிய முறையில் விசாரிக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதால் புகாரை சிபிஐ அல்லது பிற விசாரணை அமைப்பிற்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையை தாக்கல் செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிட்டு விசாரணை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: