இன்ஜினியரிங் படிப்புக்கு அரசு பள்ளி மாணவர்கள் 22 ஆயிரம் பேர் விண்ணப்பம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: இன்ஜினியரிங் கல்லூரிகளில் அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சுமார் 11 ஆயிரம் சீட்டுகள் மட்டுமே உள்ள நிலையில், 22 ஆயிரம் மாணவர்கள்  விண்ணப்பித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 1.5 லட்சம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வழியாக 2 லட்சத்து 11 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.  கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. இதில் இடஒதுக்கீட்டின் கீழ் 22 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாணவர்களுக்கு கட்-அப் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை இடங்கள் ஒதுக்கப்படும்.

ஆனாலும் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காதவர்கள் பொது கலந்தாய்வில் பங்கேற்று விரும்பிய கல்லூரிகளில் சேரலாம். எனவே விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் இடங்கள் கிடைக்கும். அவர்களுக்கான கல்வி கட்டணத்தையும் தமிழக அரசே செலுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையில் சமர்ப்பித்தவர்களில் விளையாட்டு பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே, இதுவரை பங்கேற்காத மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் இன்று (12-ந் தேதி) காலை 10 மணி முதல் 3 மணி வரை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு நேரில் வந்து ஆவணங்களை சரிபார்ப்பு பணியை முடித்து கொள்ளலாம் என்று தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: